×

தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்

 

புதுடெல்லி: டெல்லியில் பொங்கல் விழா கொண்டாடிய பிரதமர் மோடி தமிழில் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்து கூறினார். உலகெங்கிலும் தமிழர்களால் போற்றப்படும் உலகளாவியா விழாவாக பொங்கல் உருவெடுத்துள்ளதாக புகழ்ந்து பேசினார். டெல்லியில் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பொங்கல் பானைக்கு பூஜை செய்து வழிபட்ட பிரதமர் மோடி, பசுவுக்கு உணவு வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘‘அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’’ என தமிழில் வாழ்த்து கூறி தனது பேச்சை தொடங்கினார். அதில் பிரதமர் மோடி கூறியதாவது: நன்றி என்பது வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, நமது அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும் என்பதை பொங்கல் விழா நமக்கு நினைவூட்டுகிறது. பூமி நமக்கு இவ்வளவு கொடுக்கும்போது, அதைப் போற்றி பாதுகாப்பது நமது பொறுப்பு. இந்த விழா விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுகிறது. நமக்கு உணவளிக்கும் நிலத்திற்கும் சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்துகிறது.

உலகம் முழுவதும், தமிழ் சமூகத்தினரும், தமிழ் கலாச்சாரத்தைப் போற்றுபவர்களும் பொங்கல் விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். அவர்களுடன் இருப்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் கலாச்சாரம் உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்று. இது பல நூற்றாண்டுகளின் ஞானத்தையும் பாரம்பரியத்தையும் உள்ளடக்கியது. வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்திற்கு வழிகாட்டுகிறது.

இந்த பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு, இன்றைய இந்தியா முன்னேறிச் செல்லும்போது அதன் கலாச்சார வேர்களிலிருந்து வலிமையைப் பெறுகிறது. இந்த மங்களகரமான பொங்கல் திருநாளில், இந்தியாவை முன்னோக்கிச் செலுத்தும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் உணர்வு அதன் கலாச்சாரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதையும், அதன் நிலத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளது என்பதையும் நாம் உணர்கிறோம்.

மண் வளத்தைப் பேணுவது, தண்ணீரைச் சேமிப்பது, எதிர்கால சந்ததியினருக்காக வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது ஆகியவை அவசியமானவை. இவ்வாறு இயற்கையுடன் இணக்கமான சமநிலையைப் பேண வேண்டும் என்ற செய்தியை வழங்கும் பொங்கல், உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் போற்றப்படும் உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றார்.  ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அழைப்பை ஏற்று, சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரசாத் ஆகியோர் பிரதமர் மோடியுடன் நேற்று பொங்கல் விழாவில் பங்கேற்றனர். விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திருவாசகம் பாடி இசை அமைத்தார்.

* தலைமுறைகளுக்கு உறவை வலுப்படுத்தும்

பொங்கல் திருநாளையொட்டி பிரதமர் மோடி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தில், ‘‘அன்புள்ள மக்களே, வணக்கம். பொங்கல் திருநாளையொட்டி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா விவசாயம், கடினமாக உழைக்கும் விவசாயிகள், கிராமப்புற வாழ்க்கை மற்றும் உழைப்பின் கண்ணியம் ஆகியவற்றுடன் ஆழமாக பிணைந்துள்ளது.

குடும்பங்கள் ஒன்று கூடி பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து மகிழ்ச்சியையும் நல்லெண்ணத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். இது தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. உலகின் பழமையான மொழியான தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதில் பெருமை கொள்கிறோம். மீண்டும் ஒருமுறை இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இந்த விழா அனைவரின் வாழ்விலும் அபரிமிதமான செழிப்பு, வெற்றி, நல்ல ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்’’ என கூறி உள்ளார்.

Tags : PM Modi ,Pongal ,Delhi ,New Delhi ,Modi ,Tamil ,Union Minister of State ,L. Murugan ,Delhi… ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது