பவாய்: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்கு காரணமாக, பெரும்பாலான மக்கள் தத்தமது வீடுகளில் முடங்கி போயிருக்க, இதுவரை வனப்பகுதிகளில் உலா வந்த பிராணிகளை தெருக்களிலும் சாலைகளிலும் சகஜமாக காணமுடிகிறது. மும்பை போன்ற நகர்ப்புற சாலைகள் இதுவரை கண்டிராத வகையில் மயில்கள் தோகை விரித்தாடுவதையும், மான்கள் துள்ளி ஓடுவதையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், பவாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு புள்ளி மான் ஒன்று அழையா விருந்தாளியாக வந்து அந்த வீட்டில் உள்ளவர்களையும், அக்கம் பக்கத்தினரையும் வியப்பிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியது.
பவாயில் உள்ள அனுமன் தேக்டி என்ற இடத்தில் வசிப்பவர் சவிதா சிங். நேற்று முன்தினம் இரவு சவிதா சிங்கின் குடும்பத்தினர் வழக்கம்போல படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டுக் கதவு லேசாக திறந்திருந்ததாக தெரிகிறது. அதன் வழியாக அழகிய புள்ளிமான் ஒன்று வீட்டுக்குள் வந்து பீரோவுக்கு அருகில் சாவகாசமாக அமர்ந்து கொண்டது. ஏதோ வித்தியாசமான சத்தத்தை கேட்ட சவிதா சிங் மற்றும் குடும்பத்தினர் கண்விழித்து பார்த்தபோது, புள்ளி மான் ஒன்று உட்கார்ந்திருப்பதை பார்த்து வியப்பில் உறைந்து போனார்கள். வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி தெரிவித்தனர். அவர்கள் புள்ளிமானை வியப்புடன் பார்த்தனர். இதற்கிடையே, இதுபற்றி வனவிலங்கு ஆர்வலர் அமைப்பு ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து புள்ளிமானை பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பவாயை ஒட்டி சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் இருந்துதான் புள்ளி மான் சவிதா சிங்கின் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அந்த வனப்பகுதியிலேயே புள்ளிமான் விடப்பட்டது.