திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் தூண்டுதலின் பேரில் தான் சொப்னா தலைமையிலான கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது என்று சுங்க இலாகா ஆணையர் சுமித்குமார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் கடந்த வருடம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது. இது தொடர்பாக அமீரக துணை தூதரின் முன்னாள் நிர்வாக செயலாளரான தங்கராணி சொப்னா உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சுங்க இலாகா, மத்திய அமலாக்க துறை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்தன. சுங்க இலாகா நடத்திய விசாரணையில், சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர் கடத்தியது தெரியவந்தது.இந்த நிலையில் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சொப்னா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுங்க இலாகாவிடம் கூறினார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் நீதிமன்றம் சொப்னாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சுங்க இலாகா ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. சுங்க இலாகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதல் பேரில், அமீரக தூதரகத்திடம் இருந்து கிடைத்த உதவியுடன் தான் சொப்னா கும்பல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது. இந்த விவரங்களை விசாரணையின் போது சொப்னா தெரிவித்து உள்ளார். இதனால் தான் தன்னுடைய உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக கூறினார்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே கேரள சுங்க இலாகா ஆணையாளர் சுமித்குமார் மும்பைக்கு மாற்றப்பட்டு உள்ளார். மும்பை புறப்படுவதற்கு முன்பு அவர் கொச்சியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஆகியோரது தூண்டுதலின் பேரில், சொப்னா கும்பல் கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியது உண்மைதான். இந்த விவரங்களை எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தங்க கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் நான் பணிபுரிந்த காலத்தில் கேரளா, லட்சத்தீவு வழியாக கடத்தப்பட்ட பெருமளவு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1 டன் கடத்தல் தங்கம் சிக்கி உள்ளது’’ என்றார். சுங்க இலாகா அதிகாரியின் இந்த தகவல் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….
The post கேரள முதல்வரின் தூண்டுதலால் சொப்னா கும்பல் டாலர் கடத்தல்: சுங்க இலாகா அதிகாரி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.
