புதுடெல்லி: நாடு முழுவதும் இதுவரை 214 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்ட நிலையில், இன்றுடன் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு 600வது நாளை எட்டியதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் உலகையே ஆட்டிப்படைத்த நிலையில், தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றிய தடுப்பூசி திட்டம் கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. பெரும்பாலும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக போடப்பட்டன. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் தடுப்பூசிகள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டாலும் கூட, மேற்கண்ட இரு தடுப்பூசிகளும்தான் மக்களுக்கு ெபருமளவில் போடப்பட்டது. முதல் டோஸ், இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு தற்போது பூஸ்டர் தடுப்பூசியாக மூன்றாவது தடுப்பூசி போடப்படுகிறது. நேற்றுடன் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு 599 நாட்கள் முடிந்த நிலையில் நேற்றிரவு வரை 213.88 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. இன்றுடன் 600வது நாளை இந்திய தடுப்பூசி திட்டம் எட்டிய நிலையில், ஒன்றிய, மாநில சுகாதார துறையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஒட்டுமொத்த முதல் டோஸ் தடுப்பூசி 102,34,12,443 டோசும், 2வது தடுப்பூசி 94,40,31,419 டோசும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி 17,14,27,129 டோசும் போடப்பட்டுள்ளன. அனைத்து நிலைகளிலும் மொத்தம் 213,88,70,991 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post இந்திய தடுப்பூசி திட்டம் 600வது நாளை எட்டியது: இதுவரை 214 கோடி டோஸ் செலுத்தப்பட்டது appeared first on Dinakaran.
