மேஷம்

போராட்டங்களும், புரட்சிகரமான சிந்தனைகளும் உடைய நீங்கள், தன்னைப்போல் மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நினைப்பீர்கள். கடந்த ஒரு மாதமாக 2ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பணப்பற்றாக்குறையையும், முன்கோபத்தையும், ஏடாகூடமாகப் பேசுவதையும் கொடுத்து வந்த சூரியன் இந்த மாதம் முழுக்க 3ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு வேலை அமையும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். ராசிநாதன் செவ்வாய் 10ம் வீட்டில் நிற்பதால் சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.

என்றாலும் கேதுவுடன் சேர்ந்திருப்பதால் உத்யோகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்து நீங்கும். குருபகவானும் உங்கள் ராசிக்கு 7ல் நின்றபடி உங்கள் ராசியை பார்ப்பதால் முகப்பொலிவு கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திடீர் யோகம், செல்வாக்கு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழியில் ஆதாயமுண்டு. தடைபட்ட பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். மனைவிவழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சனிபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலை கிடைக்கும். தெளிவு பிறக்கும். தைரியமும் உண்டாகும். மரியாதைக் கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் நீங்கும்.

அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிசயிக்கும்படி சிலவற்றை செய்வீர்கள். மாணவர்களே! புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். நினைவாற்றல் கூடும். கன்னிப் பெண்களே! பழைய நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கடையை விரிவுப்படுத்துவீர்கள், அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஆனால் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உத்யோக ரகசியங்களை சொல்லித் தருவார்கள். சக ஊழியர்களுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரும் என்றாலும் அவர்களால் உதவிகள் உண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 15, 16, 21, 22, 23, 24, 30 மற்றும் ஜூலை 1, 2, 3, 4, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 25, 26, 27ம் தேதி நண்பகல் 12.07 மணி வரை.

பரிகாரம்:

திருத்தணி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.