×

கும்பம்

பொதுவுடைமைச் சிந்தனைவாதிகளான நீங்கள் மற்றவர்களிடம் மனம் நோகாமல் பேசி பழகுவீர்கள்.  குரு ராசிக்கு 9ம் வீட்டில் சாதகமாக அமைந்திருப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப்பதவிகள் தேடி வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். சனி லாப வீட்டில் நிற்பதால் அயல்நாடு, அண்டை மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். சூரியன் இந்த மாதம் முழுக்க 5ம் வீட்டில் நிற்பதால் அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். கண் வலியும் வரும். குளிர்ச்சி தரக்கூடிய காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை, ஆசைகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். உங்களுடைய எண்ணங்களை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். பாகப்பிரிவினை விஷயத்திலும் தடங்கல்கள் வந்து நீங்கும். 22ம் தேதி வரை புதன் சாதகமாக இருப்பதால் ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும்.

ஆழ்ந்து சிந்தித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கப் பாருங்கள். நீண்ட நாளாக போக நினைத்தும் முடியாமல் போன குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். 23ம் தேதி முதல் புதன் 6ல் சென்று மறைவதனால் உறவினர்கள், நண்பர்களுடன் உரசல் போக்கு வந்து போகும். செவ்வாயும், கேதுவும் சேர்ந்து 12ல் நிற்பதால் உங்கள் பிள்ளைகள் கல்வி, வேலைக்காக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கர்ப்பிணிப் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். வெளிப்படையான விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களே! விளையாட்டுக் கலைத்துறைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்.

கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வசூலாகாமல் இருந்து வந்த பாக்கிகளும் வசூலாகும். பழைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கடையை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களையும் மாற்றுவீர்கள். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வரும். சிலர் கூட்டுத் தொழிலிலிருந்து விடுப்பட்டு தனியாக சொந்தமாக தொழில் தொடங்கும் நிலை உருவாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையென்ற ஆதங்கமும் இருந்து கொண்டேயிருக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு சம்பந்தப்பட்ட தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். விவசாயிகளே! மகசூல் பெருகும். பூச்சித் தொல்லை குறையும். கலைத்துறையினரே! உங்களுடைய உழைப்பிற்கு வேறு ஒருவர் உரிமைக் கொண்டாடக் கூடும். சிக்கனமும், நாவடக்கமும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 16, 17, 18, 19, 23, 24, 25, 26, 27, 28 மற்றும் ஜூலை 5, 6, 7, 8, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூன் 20ம் தேதி பிற்பகல் 1.03 மணி முதல் 21, 22ம் தேதி மாலை 6 மணி வரை.

பரிகாரம்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசியுங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.

Tags :
× RELATED மேஷம்