×

தமிழக மக்கள் மீதான வன்மத்தால் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கிறது ஒன்றியஅரசு: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல் பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அடம் பிடிப்பது வரலாற்றின் மீதோ, அறிவியல் மீதோ இருக்கும் அக்கறையினால் அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பாஜ பரிவாரம் புராணங்களின் அடிப்படையிலும், புனைகதைகளின் அடிப்படையிலும் கட்டமைக்க முயல்கிற திணிப்பிற்கு மாறாக கீழடி அகழாய்வின் முடிவுகள் வெளிவந்து கொண்டே இருப்பதுதான்.

தமிழக தொல்லியல்துறை நடத்தும் ஆய்வு தமிழர்கள் வாழ்வியல் குறித்தும், தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் விவரிக்கும் சங்க இலக்கிய பாடல்களின் பொருண்மை சான்றுகளை வெளிக் கொணர்ந்த வண்ணம் உள்ளன.
இதை சரஸ்வதி நாகரிகம் என்று சரடு விடுபவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஒன்றிய அரசு மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இது வரலாற்றுக்கும், அறிவியலுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. வரலாறு மற்றும் அறிவியலுக்கு புறம்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தின் காரணமாகவும் ஒன்றிய பாஜ அரசு இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அடாவடித்தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக மக்கள் மீதான வன்மத்தால் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கிறது ஒன்றியஅரசு: மார்க்சிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,Chennai ,Communist Party of India ,Marxist ,State Secretary ,P. Shanmugam ,Union Culture Minister ,Gajendra Singh Shekhawat Adamu ,Keezhadi ,
× RELATED சொல்லிட்டாங்க…