திருப்பூர்: தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் திருப்பூர் அருகே ஆலங்காடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய வரலாற்றில் அதிகம் பேர் விருப்ப மனுவிற்காக பணம் கட்டியதாக (அதிமுக) கூறி வந்தாலும், பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தேர்தலில் போட்டியிட ஆட்களை தேட வேண்டிய நிலை ஏற்படும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதை பார்த்து இருக்கிறோம். தேடி தேடி ஆட்களை பிடித்து நிற்க வைத்தார்கள்.
வருகின்ற ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள விஜய் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் விரும்பும் மாற்றத்தை தரக்கூடிய தலைவராக இருக்கிறார். நான் அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். என்னை கரம் பிடித்து அழைத்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன் இவ்வாறு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, பாஜ தலைவர் நயினாரின் தவெக மீதான விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ‘இது தமிழ்நாடு, தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார்களே தவிர அவர்களை பற்றி பேச வேண்டியதில்லை.
வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கிறோமே தவிர டெபாசிட் இழப்பதற்கு அல்ல. புதுச்சேரி, ஈரோடு நிகழ்ச்சிக்கு பிறகு இனி நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் வரலாறு படைக்கும் நிகழ்ச்சிகளாக இருக்கும். பாஜ – அதிமுக தொகுதி பங்கீடு பட்டியல் வெளியானதற்கு அதிமுக காரணமில்லை என ஜெயக்குமார் சொல்லியுள்ளார். அதிமுக தலைவர்கள் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பிறகு இதனை அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் 3 நாட்கள் கழித்து தானே பதில் சொல்லி இருக்கிறார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைப்பு பொங்கலுக்குள் சாத்தியம்’ என்றார்.
* ‘விஜய்யுடன் பணியாற்ற கொடுத்து வச்சிருக்கேன்’
கோபி: கோபியில் உள்ள தவெக அலுவலகத்தில் நேற்று வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டத்தில் செங்கொட்டையன் பேசுகையில், ‘எல்லோரும் சொன்னார்கள், செங்கோட்டையன் இங்கே சேர்ந்திருக்கிறார் என்று. நான் கோட்டைக்கு செல்லும் கட்சியில் தான் சேர்ந்து இருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். இப்போது மூன்றாவது தலைவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. தலைவரை காணும் போது மகிழ்ச்சியை தந்தது. என்னிடம் அவர் மனம் திறந்து பேசினார். அப்படிப்பட்ட ஒரு தலைவரோடு இணைந்து பணியாற்ற நான் கொடுத்து வைத்து இருக்கிறேன்’ என்றார்.
