உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில், அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியதாவது: அதிமுகவில் இருந்து அவர் போய்விட்டார். இவர் போய்விட்டார். இவர் போகப்போகிறார், அவர் போகப்போகிறார், இதனால் கட்சி பலவீனமாகி விட்டது, அதிமுக 3 ஆக இருக்கிறது, 5 ஆக இருக்கிறது என ஆளாளுக்கு இஷ்டத்திற்கு கூறி வருகிறார்கள்.
இங்கிருந்து போன ஒருவர்(செங்கோட்டையன்) பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் யார், யார் வருகிறார்கள் என்று கூறுகிறார். அவர் இப்படிச்சொல்லி 3 மாதங்கள் ஆகிவிட்டது.
அவரது நிழல் கூட எங்கும் போகவில்லை. அவர் போகிறார், இவர் போகிறார் என்று கூறுவதில், உனக்கு ஏன் வயிற்றெரிச்சல்., அதிமுகவில் அமைச்சரா இருந்துட்ட… தலைமைக்கழக பொறுப்புலயும் இருந்துட்ட…. இப்ப போ… போய் யாரை வேண்டுமானாலும் வாழ்கன்னு சொல். ஆனால் அதிமுகவை பலவீனப்படுத்த நினைக்காதே. கட்சியின் கடைசி தொண்டன் இருக்கும் வரை, இந்த இயக்கத்தை எவனாலும் தொட்டுப்பார்க்க முடியாது. நீங்க இருந்தபோது அதிமுக நல்லா இருந்தது. நீங்க இல்லை என்றதும், அதிமுக கேடுகெட்டுப் போய்விடுமா? இது எந்த வகையில் நியாயம். போயிட்டீங்களா… போயிடுங்க… திரும்ப ஏன் சுரண்டிட்டே இருக்கீங்க, நீ வர்றியா? நீ வர்றியான்னு.
உனக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல். 9 முறை எம்எல்ஏவா இருந்தீங்கள்ல, எப்படி ஆனீங்க? அதிமுக கொடி பிடிக்கும் கடைசி தொண்டனின் உழைப்பால், எம்ஜிஆர், ஜெயலிதாவின் செல்வாக்கால் ஆனீங்க. இனிமேல் என்ன ஆவீங்க என ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும். போனீங்களா… முழுசா போயிடுங்க, இந்த இயக்கத்தை தொண்டர்கள் பார்த்துக் கொள்வார்கள். தேவையில்லாமல் பேசி பலவீனப்படுத்த வேண்டாம். டிவியை திறந்தாலே நெஞ்சுவலி வருது. நினைத்து பார்க்க முடியாத அளவு என்ன என்னென்னமோ பேசுகிறார். ஆனால், இது தொண்டர்கள் கட்சி என்பதை உணராமல் பேசுகிறார். இவ்வாறு பேசினார்.
