சேலம்: சேலத்தில் வரும் 29ம் தேதி நடக்கும் பாமக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு வழங்க கேட்டு, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ராமதாஸ் தரப்பினர் மனு கொடுத்தனர். சேலத்தில் நாளை மறுதினம் (29ம் தேதி) பாமக சார்பில் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என அன்புமணி தரப்பை சேர்ந்த பாமகவினர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம், நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். இந்நிலையில் நேற்று, சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கு, ராமதாஸ் தரப்பை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் வந்து, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியிடம் ஒரு மனுவை வழங்கினர்.
அந்த மனுவில், ‘சேலத்தில் வரும் 29ம் தேதி, பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், பாமக தலைவராக அன்புமணி இல்லை. டெல்லி உயர்நீதிமன்றம் கூறிய பிறகும், அவர்கள் தரப்பினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு அளித்து, சேலத்தில் செயற்குழு, பொதுக்குழு நடத்தக்கூடாது என தவறான தகவல்களை தெரிவிக்கின்றனர். அவர்கள் மீதும், பொய் புகார் அளிக்க தூண்டிய அன்புமணி மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனக்கூறியிருந்தனர்.
