மதுரை: அண்ணாமலை தொலைபேசியில் பேசும்போதும், நேரில் சந்திக்கும் போதும் எங்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால், நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை தெற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு மதுரை காமராஜர் சாலை பகுதியில் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செங்கோட்டையனின் முடிவு அவராக எடுத்தது. தவெகவிற்கு போகுமாறு அவரை நான் தூண்டியதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் என்ன முடிவெடுத்தாலும் அது நான் கூறித்தான் என வதந்தியை கிளப்புகின்றனர். பல மாதங்களுக்கு பிறகு தான் என்டிஏவை விட்டு வெளியேறினோம். கூட்டணி குறித்து ஓபிஎஸ் அறிவித்து விட்டார். டிடிவி ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்கின்றனர்.
எப்போது, என்ன முடிவு என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நாங்கள் விரும்பும் கூட்டணிக்கு தான் நாங்கள் செல்வோம். எங்களது தகுதியான வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் கூட்டணிக்கு செல்வோம். தை மாதத்தில், ஜெயலலிதா பிறந்த நாளுக்கு முன்பாக கூட்டணி குறித்து அறிவிப்போம். யாரோ ஒருவருக்காக நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசியல் நோக்கர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. புதிதாக ஒரு கூட்டணிக்கு போகும்போது அந்த கூட்டணியில் எங்களுக்கான சீட்டை உறுதிபடுத்திய பிறகு தான் சொல்ல முடியும். நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
அண்ணாமலை தொலைபேசியில் பேசும் போதும், நேரில் சந்திக்கும் போதும் எங்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைக்கிறார். அது உண்மை. ஆனால், அது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓபிஎஸ் எடுக்கும் முடிவு அவரது கட்சி முடிவு. ஒருவரையொருவர் நட்புரீதியாக சந்தித்தாலோ, டெல்லி போனாலோ, மாற்று கட்சியினரை சந்தித்தாலோ அது எங்களுக்கு மிரட்டல், அழுத்தம் என பேசுவது முட்டாள்தனமானது. கோவையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து டெல்லி சென்று பாஜக தலைவரை நான் சந்தித்ததாக கூறுவது நூறு சதவீத பொய். நான் யாரையும் சந்திக்கவில்லை.
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நிர்வாகிகள், தொண்டர்களின் ஒத்துழைப்பு போதும். தவெக கூப்பிடுகிறது என்கிறார்கள். கூப்பிடவே இல்லை என்கின்றனர். நாங்கள் கூட்டணிக்கு வரவேண்டுமென விரும்புவோர் பேசுவது உண்மை. நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர்களது அழைப்பை நிராகரிக்கவும் இல்லை. அதனை அப்படியே ஏற்கவும் இல்லை. கூட்டணி தொகுதி பங்கீடு விபரம், இத்தனை சீட் ஒதுக்கீடு என தகவல் கொடுத்தது யார் என்பது தெரியும். அவர்களது வதந்திக்கான நோக்கமும் எங்களுக்கு தெரியும். தேர்தல் என்பது 3 மாத கூத்து. அதன்பிறகும் அரசியலில் இருப்போம், கட்சி நடத்துவோம். நான் போட்டியிடுவதா, வேண்டாமா என இன்னும் முடிவெடுக்கவில்லை. நீதிமன்றமும், அரசாங்கமும் கடவுள், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
