தூத்துக்குடி: பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பாஜ எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தெரிந்த பிறகு, தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும். நான் தேர்தலில் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். தவெக தேர்தலை சந்திக்காத கட்சி. அவர்கள் தேர்தலை சந்தித்து கொள்கை, கோட்பாடுகளை தெரிவிக்க வேண்டும். தேர்தலை சந்தித்த பின்புதான், விஜயின் நிலைப்பாடு தெரியும்.
அப்போதுதான் அவர் அரசியல் கட்சியை நடத்துவாரா, மாட்டாரா என்பது தெரியும். தவெக தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, விஜய்யை பார்க்க கார் முன்பு நின்றுள்ளார். பனையூரில் பாதுகாப்பு இல்லாத நிலை ஏதும் இல்லை. இதனால் விஜய் காரிலிருந்து இறங்கி பேசியிருந்தால் கதாநாயகனாக, தலைவனாக இருந்திருக்க முடியும். பிரச்னை என்னவென்றே அறியாமல் கடந்து சென்றவர் எப்படி தலைவனாக முடியும்? மனிதாபிமான அடிப்படையில் விஜய் காரை நிறுத்தி பேசி இருந்தால் அந்த பிரச்னை அப்போதே முடிந்து இருக்கும். நடிகர் விஜய் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறி உள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். இவ்வாறு சரத்குமார் கூறினார்.
