×

தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து!!

டெல்லி: தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட அரசுகளுக்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை திட்டமாகும்.

இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன. எனவே தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் எந்தவொரு மாநிலத்தையும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 போன்ற ஒரு கொள்கையை ஏற்றுக்கொள்ள ஒரு மாநிலத்தை நேரடியாக கட்டாயப்படுத்த முடியாது. இருப்பினும், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான ஒரு மாநிலத்தின் நடவடிக்கை அல்லது செயலற்ற தன்மை ஏதேனும் அடிப்படை உரிமைகளை மீறினால் நீதிமன்றம் தலையிடலாம். இந்த ரிட் மனுவில் இந்தப் பிரச்சினையை ஆராய நாங்கள் முன்மொழியவில்லை. மனுதாரருக்கும் மனுவில் கூறியுள்ள அம்சத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamil Nadu ,BJP ,G. S. Mani ,Kerala ,West Bengal ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...