சென்னை: இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் இருந்து சண்டிகர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சண்டிகரிலிருந்து சென்னை வரும் பயணிகள் விமானம் என 2 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதோடு, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் பகுதிகளில் இந்திய முப்படைகள் நேற்று அதிகாலையில் தாக்குதல்களை நடத்தின. இதையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள இந்திய விமான நிலையங்களில் விமான சேவைகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து நேற்று காலை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு வழக்கமாக, சென்னையில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்பட்டு, பகல் 12.55 மணிக்கு சண்டிகர் சென்றடையும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், காலை 7.20 மணிக்கு சண்டிகரில் புறப்பட்டு, காலை 10.25 மணிக்கு, சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. இந்திய எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலை காரணமாக இந்த 2 விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டதாகவும், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், எனவே பயணிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு தெலங்கானா மாநிலத்தில் கன மழை பெய்து மோசமான வானிலை நிலவுவதால், ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை 7.20 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு காலை 8.40 மணிக்கு வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும், சென்னையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு ஐதராபாத் சென்றடைய வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
The post போர் பதற்றம் எதிரொலி சென்னை-சண்டிகர் விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.
