திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் தர்கா அருகே கல்லத்தி மரத்தில் தர்கா கொடியேற்றப்பட்டதை கண்டித்தும், அந்த கொடியை அகற்றக் கோரியும் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் மலைமேல் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்தபோது, எச்.ராஜா உள்ளிட்டோர், போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது எச்.ராஜா, போலீசாரை பார்த்து, ‘‘என்னை தடுக்கிற எல்லோரும் குடும்பத்தோடு நாசமாமாப் போகணும்னு நான் ஆண்டவன் கிட்ட வேண்டிக்கிறேன். ‘கமிஷனர், கலெக்டர், இருவரும் சட்டவிரோதமான நபர்கள். சட்டத்தை மதிக்காத தீயசக்திகள்’’ எனக் கூறியவாறு தடுப்பை மீறி, போலீசாரை தள்ளிவிட்டு மலைமீது அவரும் மற்றவர்களும் சென்றனர். அவர்களை போலீசார் மீண்டும் தடுத்தனர்.
அப்போது அந்த இடத்தில் அமர்ந்தவாறு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், எச்.ராஜா உள்ளிட்டோரை கைது செய்து கீழே அழைத்து வந்து அங்குள்ள சாவடியில் தங்க வைத்தனர். எச்.ராஜா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் வாகனத்திற்கு முன்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாஜ.வினர் அங்குள்ள சாவடியில் அடைத்து வைக்கப்பட்டனர்.
