×

போளூர் சட்டமன்ற தொகுதிக்கு பாஜ வேட்பாளர் அறிவிப்பு: அதிமுக அதிர்ச்சி

சேத்துப்பட்டு: போளூர் சட்டமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளரை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் அறிவித்ததால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அதிமுக சார்பில் பாஜ கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார்.

மீண்டும் போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் பாஜ மாநில துணைத்தலைவர் அந்த தொகுதியில் பாஜ சார்பில் வேட்பாளரை அறிவித்திருப்பது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜ சார்பில், தேவிகாபுரம் பகுதியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் பாஜ மாநில துணைத்தலைவர் டால்பின் ஸ்ரீதரன் பேசுகையில், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக ஏழுமலை களமிறக்கப்படுவார்’ என அறிவித்தார். பாஜ வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்கு முன்பு சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தொகுதி பங்கீடே முடிவாகாத நிலையில், பாஜ வேட்பாளர் இவர்தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Tags : BJP ,Bolur assembly ,AIADMK ,Chettupattu ,vice president ,Dolphin Sreedharan ,elections ,Tiruvannamalai district ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...