- நைனார்
- மதுரை
- பாஜக
- நைனார் நாகேந்திரன்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி
- பாண்டி…
மதுரை: கூட்டணி ஆட்சி என்று நாங்கள் சொல்லவில்லை என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மதுரையில் வரும் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம் மதுரை பாண்டி கோவில் அருகே வண்டியூர் திடலில் நடக்கிறது. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று பார்வையிட்ட பிறகு, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அளித்த பேட்டி:
பிரதமர் மோடி வருகையின்போது தேஜ கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்க உள்ள மாவட்டம் இன்னும் உறுதியாகவில்லை. எனினும் மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் நடந்தால் பாண்டிகோவில் அருகாமை திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் கூட்டமாக இருக்கும்.
கூட்டணி ஆட்சி என்று நாங்கள் சொல்லவில்லை. கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவது இனிமேல்தான் முடிவாகும். பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சியினர் அனைவரும் பங்கேற்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவெடுப்பார்கள். தேர்தலை ஒட்டி நெருக்கடியாக விஜய், சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறுவது தவறான கருத்து.
எல்லா இடத்திலும் இப்படி பரப்பப்பட்டு வருகிறது. விஜய்க்கு நெருக்கடி தரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அவர் ஒரு கட்சி நடத்துகிறார். நாங்கள் தே.ஜ.கூட்டணியில் உள்ளோம். அவருக்கு நெருக்கடி தரும் அவசியம் ஏதுமில்லை. மும்பையில் அண்ணாமலை பேசியது விமர்சனமாகி விட்டதாக கூறுகிறீர்கள். அவர் எவ்வித உள்நோக்கத்தோடும் பேசவில்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளாரே தவிர, மும்பை மாநிலத்திற்கு எதிராகவோ, தாக்கரேவுக்கு எதிராகவோ எந்த கருத்தும் சொல்லவில்லை. நான் அவரிடம் பேசியதில், அதுமாதிரி எந்த நோக்கமும் இல்லையென சொன்னார்.
வரும் 23ம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளை சேர்த்து பைனல் பண்ணி விடுவோமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். பாஜ 56 தொகுதிகள், 3 அமைச்சர்கள் கூட்டணியில் கேட்கிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள், பொய் செய்திகள். பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வாரா என்பது, அவரது வேலைப்பளுவை பொருத்தது. மதுரை வரும்போது இதற்கு வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கூறினார்.
* கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமுண்டா?
‘அன்புமணி பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது சட்ட விரோதம் என்று ராமதாஸ் தேர்தல் கமிஷனை நாடுகிறாரே?’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘அது அவர்களது உள்கட்சி பிரச்னை’ எனத்தெரிவித்தார் நயினார் நாகேந்திரன். அவரிடம் நிருபர்கள், ‘நீங்கள்தானே கூட்டணி வைத்துள்ளீர்கள்?’ என்றனர். இதற்கு, ‘நாங்கள் அன்புமணியோடு கூட்டணி வைத்துள்ளோம். அதுபற்றி கருத்து சொல்ல முடியாது’ என்றார். முடிவாக, ‘கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சுக்கு இடம் இருக்கிறதா?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அவசரமாக கிளம்பிச் சென்றார்.
