×

அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் பாமகவிலிருந்து டிஸ்மிஸ்: ராமதாஸ் அதிரடி

மயிலம்: அன்புமணி தரப்பை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாமக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார மோதலால் கட்சி இரண்டாக உடைந்து உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் இருதரப்பிலும் மாறிமாறி கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். பாமக எம்எல்ஏக்கள் 5 பேரில் சிவகுமார் (மயிலம்), சதாசிவம் (மேட்டூர்), வெங்கடேஸ்வரன் (தர்மபுரி) ஆகியோர் அன்புமணி அணியிலும், ஜி.கே.மணி, சேலம் அருள் இருவரும் ராமதாஸ் அணியிலும் உள்ளனர். கடந்த 20-7-2025 ல் ராமதாஸ் உத்தரவின்பேரில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் சார்பில் விளக்கம் கேட்டு அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் இதுவரையில் அவர்கள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ முறையான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. இதனால் எம்எல்ஏக்கள் சிவகுமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவின்பேரில் பொதுச்செயலாளர் முரளி சங்கர் நேற்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் முழுமையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மேற்கண்ட 3 பேரிடமும் பாமகவினர் யாரும் எந்தவித கட்சி தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் நகல்கள் சபாநாயகர், உள்துறை செயலாளர், பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பாமக சட்டமன்ற குழு கொறடா அருள் எம்எல்ஏ ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மாதம்தான் ஜி.கே.மணியை கட்சியிலிருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்தார். ஆனால் தன்னை நீக்க ராமதாசை தவிர யாருக்கும் அதிகாரமில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தசூழலில், அன்புமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை பாமக அடிப்படை உறுப்பினரில் இருந்து ராமதாஸ் அதிடியாக நீக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* விருப்ப மனு பெறுதல் மேலும் 2 நாள் நீட்டிப்பு
பாமகவில் ராமதாஸ் தரப்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறுவது கடந்த 9ம்தேதி தொடங்கியது. முதல்நாளில் 2,045 பேரும், 2வது நாளில் 955 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். 3வது நாளான நேற்றும் 1,000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,101 விருப்ப மனுக்கள் அளித்துள்ள நிலையில், இன்றும் (13ம்தேதி), நாளையும் (14ம்தேதி) விருப்ப மனு பெறுதல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார்.

* திமுகவுடன் கூட்டணி நல்ல விஷயம்தான்: ராமதாஸ் பரபரப்பு பேட்டி
சென்னையில் மருத்துவ பரிசோதனை முடிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை தைலாபுரம் தோட்டத்துக்கு புறப்பட்டார். அப்போது அவரிடம், அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவுடன் கூட்டணி பற்றி ராமதாஸ் பேசி வருவதாக கூறி உள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, “தேர்தல் நேரங்களில் பல விதமான யூகங்கள் பேச்சுகள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும், பொய்யும் இருக்கும்.

அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஊடகங்கள் கையில் இருக்கிறது’’ என்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நாட்கள் வேகமாக போய் கொண்டிருக்கிறது. முடிவெடுப்போம். தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். இப்போது எதையும் உறுதிப்பட சொல்ல முடியாது’’ என்றார்.

மாலை தைலாபுரம் வந்த ராமதாசிடம், ‘‘கூட்டணி குறித்து 2 நாட்களுக்குள் முடிவு வெளியே வரும்’’ என கூறியிருந்தது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘2 நாட்கள்தான் கடந்து போச்சு, இன்னும் 2 நாட்கள் கடக்கணும்’’ என பதிலளித்தார்.

பின்னர், அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவுடன் கூட்டணி பற்றி ராமதாஸ் பேசிவருவதாக கூறியது பற்றிய கேள்விக்கு, ‘‘நல்ல கருத்தைதான் அவர் கூறியுள்ளார். அதைப்பற்றி இப்போது சொல்வதற்கில்லை. அரசியலில் எது வேணாலும் நடக்கலாம். தேர்தல் நேரத்தில் எது வேணாலும் நடக்கலாம்’’ என்றார். பாஜவுடன் கூட்டணி அமைப்பீர்களா? என கேட்டதற்கு, ‘‘அரசியலில் எது வேணாலும் நடக்கலாம்’’ என ராமதாஸ் தெரிவித்தார்.

* எங்களை நீக்க ராமதாசுக்கு அதிகாரமில்லை: அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் பதிலடி
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன், மயிலம் சிவக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதுகுறித்து மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் கூறியதாவது: அன்புமணி தலைமையில் இயங்குவது தான் உண்மையான பாமக. தேர்தல் ஆணையம் அவரை கட்சியின் தலைவராக அங்கீகரித்துள்ளது.

ஏ-பார்ம், சி-பார்ம் போன்றவற்றில் கையெழுத்து போடும் அதிகாரமும் அவருக்ேக உள்ளது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது இந்த பிரச்னையை சிவில் கோர்ட்டிற்கு கொண்டு செல்லுமாறு கூறி விட்டனர். இந்த வகையில் தற்போது அன்புமணி தலைமையில் இயங்குவது தான் உண்மையான பாமக. 90 சதவீதம் வன்னிய மக்களும், கட்சியினரும் அன்புமணியின் பக்கமே உள்ளனர்.

இந்த அடிப்படையில் தான் அங்கீகரிக்கப்பட்ட பாமக தலைவரான அன்புமணியிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணியில் உள்ள இதரகட்சிகளும் அன்புமணி தலைமையில் செயல்படுவது தான் உண்மையான பாமக என்பதை உணர்ந்துள்ளனர். எனவே, நாங்கள் தான் உண்மையான பாமக எம்எல்ஏக்கள். பாமக நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் மீது எங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு.

ஆனால் தற்போதைய நிலையில் எங்கள் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற தலைவரான அன்புமணிக்கு மட்டுமே உண்டு. ஏற்கனவே எங்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அப்ேபாது அன்புமணி எங்களுக்கு மாவட்ட அளவில் புதிய பொறுப்புகளை வழங்கினார். அந்த அடிப்படையில் நாங்கள் கட்சி பணி ஆற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கூறுகையில், ‘ராமதாஸ் ஏற்கனவே எங்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கிய அங்கீகாரத்தின் படி தற்போது தலைவர் அன்புமணி தலைமையில் பணியாற்றி வருகிறோம். என்னை போன்றவர்களுக்கு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பொறுப்புகள் கொடுத்து கட்சி பணியாற்ற அறிவுறுத்தி உள்ளார் அன்புமணி. எனவே ராமதாஸ் வெளியிட்டுள்ள நீக்க அறிவிப்பு ஏற்புடையதல்ல,’’ என்றார்.

Tags : 3 ,Anbumani ,PMK ,Ramadoss ,Mayilam ,Ramadoss' ,Dr. ,Anbumani Ramadoss… ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...