- ராகுல் காந்தி
- நீலகிரி
- செல்வப்பெருந்தகை
- கோயம்புத்தூர்
- காங்கிரஸ்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- கோயம்புத்தூர் விமான நிலையம்
கோவை: ‘கூட்டணிக்கு குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் இனிமேல் பேச மாட்டார்கள்’ என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அளித்த பேட்டி: ராகுல் காந்தி நாளை (இன்று) மதியம் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார். பள்ளி விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் அவர் பங்கேற்கிறார்.
ராகுல் காந்தி கூடலூரில் முழுக்க முழுக்க பள்ளி நிகழ்விலும், பொங்கல் விழாவிலும் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இதில் அரசியல் இல்லை. மும்பை குறித்து அண்ணாமலை அறிவில்லாமல் பேசுகிறார். அவருக்கு எதை தின்றால் பித்தம் தெளியும் என தெரியாது. அவர் மகாராஷ்டிரா, மும்பை பற்றி பேசுவார். ஆனால் தமிழ்நாட்டை பற்றி பேசமாட்டார். ஆக்கபூர்வமாக, அறிவுபூர்வமாக, நாகரிகமாக பேசமாட்டார்.
காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து உள்ளது. அதை பதிவு செய்கிறார்கள். ஆனால், கூட்டணி குறித்து எங்கள் தேசியத் தலைமை தான் முடிவு செய்யும். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. எக்கு கோட்டை மாதிரி இருக்கிறது. இது கொள்கையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி. வேறு எதற்காகவும் இல்லை.
பாசிச சக்திகளை, மதவாதிகளை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாது, தமிழ் மண்ணில் ஊடுருவ அனுமதிக்க கூடாது என தமிழ் மக்களையும், மண்ணையும் காப்பாற்றும் கூட்டணி. விஜய்யை எங்கள் கட்சிக்காரர்கள் போய் பார்ப்பது என்பது, அவர்களது விருப்பம். காங்கிரஸ் தலைமை யாரிடமும் கொல்லைப்புறமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு கொல்லைப்புற அரசியல் செய்யும் அவசியம் இல்லை, நேரடி அரசியல் செய்கிறோம். திமுக தவிர வேறு யாரிடமும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் கூட்டணி பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளோம். கூட்டணிக்கு குந்தகம் விளைவிப்பது போல காங்கிரஸ் கட்சியினர் இனிமேல் பேச மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* ‘சிங்கம் வாயில் மாட்டிய விஜய்’
‘ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான போலீஸ் என நமது காவல் துறை பெயரெடுத்துள்ளது. கரூர் விவகாரம் குறித்து இங்கேயே விசாரித்து இருந்தால், விஜய்க்கு சிரமமும் சங்கடமும் ஏற்பட்டு இருக்காது. விஜய்யை புதுடெல்லி வரவழைத்து அரசியல் ஒப்பந்தம், தேர்தல் ஒப்பந்தம் போடுவதற்கு முயற்சி செய்யலாமா என பாஜ துடித்துக் கொண்டுள்ளது.
ஆனால் அவர்களது முயற்சி வெற்றி பெற வாய்ப்பில்லை. இருந்தாலும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஒப்பந்தத்திற்கு தயாரானால் வழக்குகள் மாயமாக மறைந்துவிடும். சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட கதையாக விஜய் சிக்கி இருக்கிறார்’ என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
