சென்னை: பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் நிலைநிறுத்தும் பாதையில் இருந்து விலகியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தொலைதொடர்பு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. எல்விஎம் 3 போன்ற ராக்கெட்டுகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது. அதேபோல், வணிக ரீதியான பல செயற்கைக்கோள்களையும் அனுப்புகிறது.
குறிப்பாக சந்திரயான்-1, செவ்வாய் கிரக சுற்றுப்பாதை மிஷன், ஆதித்யா-எல்1 மற்றும் ஆஸ்ட்ரோசாட் மிஷன் போன்ற 63 பயணங்களை நிறைவு செய்துள்ள இஸ்ரோவின் திறமையான ஏவுதள வாகனமாக பி.எஸ்.எல்.வி இருக்கிறது. 2017ம் ஆண்டில், பிஎஸ்எல்வி ஒரே பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவி உலக சாதனை படைத்தது.
இந்த நிலையில் பிஎஸ்எல்வி சி – 62 ராக்கெட் 2026ம் ஆண்டின் முதல் ராக்கெட் என்பதால் முக்கியத்துவம் ஆகவும், பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. அந்தவகையில் ராணுவ பயன்பாட்டிற்காக ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ்,
லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 16 துணை செயற்கைக்கோள்களுடன் 44.4 மீட்டர் உயரம் உள்ள பிஎஸ்எல்வி சி – 62 ராக்கெட் நேற்று காலை 10.17 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்டு 17 நிமிட பயணத்திற்கு பிறகு இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களை சுமார் 511 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்த மொத்தம் 4 நிலையை கடக்க வேண்டும். 2 நிலை வெற்றிகரமாக கடந்த நிலையில் 3வது இறுதி நிலையின் போது கோளாறு ஏற்பட்டு பி.எஸ்.எல்.வி.சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையை விட்டு விலகியது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் கூறுகையில்,‘ பி.எஸ்.எல்.வி. சி-62 இ.ஓ.எஸ். – என். 1 திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த பி.எஸ்.எல்.வி. 2 திட எரிபொருள் நிலைகள் மற்றும் 2 திரவ எரிபொருள் நிலைகள் என 4 நிலைகளை கொண்ட ராக்கெட். 3வது நிலையின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்த படியே இருந்தது. 3வது நிலை முடிவடையும் தருணத்தில் ராக்கெட்டில் அதிகப்படியான அதிர்வுகளை கண்டோம்.
இதன் விளைவாக, ராக்கெட்டின் பயணப் பாதையில் ஒரு விலகல் காணப்படுகிறது. இலக்கை அடைய முடியவில்லை. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம். குறிப்பாக தற்போது பல்வேறு தரைக் கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து (Ground Stations) தரவுகளை சேகரித்து வருகிறோம். முழுமையான ஆய்வுக்குப் பிறகே ராக்கெட் மற்றும் அதிலிருந்த செயற்கைக்கோள்களின் நிலை என்ன என்பதை துல்லியமாகச் கூற முடியும்,’என்றார்.
