×

டெல்லியின் சிஆர் பார்க் பகுதியில் மீன் கடையை மூடும் பாஜக குண்டர்கள்: திரிணாமுல் எம்பி காட்டம்

புதுடெல்லி: டெல்லியின் சிஆர் பார்க் பகுதியில் மீன் கடையை பாஜக குண்டர்கள் மூடுகின்றனர் என்று திரிணாமுல் எம்பி காட்டமாக தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்ட பதிவில், ‘தலைநகர் ெடல்லியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் பெங்காலி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் வாழும் இடத்தில் இருந்த மீன் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன. பாஜகவைச் சேர்ந்த குண்டர்கள், அப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு அருகே மீன் வியாபாரம் செய்வதற்காக வியாபாரிகளை மிரட்டியுள்ளனர்’ என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், காவி நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்த ஒரு நபர், சிஆர் பார்க்கில் அமைந்துள்ள மார்க்கெட் எண் 1-ல், கோயிலுக்கு அருகே மீன் மார்க்கெட் அமைப்பது தவறு என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. எம்பி மொய்த்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த டெல்லி காவல்துறை, ‘இதுதொடர்பாக எந்தப் புகாரும் பதிவாகவில்லை என்றாலும், இந்த விவகாரம் விசாரணையில் நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது இடம்பெயர்ந்த பெங்காலிகளுக்காக உருவாக்கப்பட்ட சிஆர் பார்க்கில், தற்போது டெல்லியில் ஆளும் பாஜக அரசின் ஆட்கள் அத்துமீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருந்தாலும் எம்பி வெளியிட்ட வீடியோ குறித்த உண்மைதன்மை விசாரிக்கப்பட்டு வருவதால் டெல்லி அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

The post டெல்லியின் சிஆர் பார்க் பகுதியில் மீன் கடையை மூடும் பாஜக குண்டர்கள்: திரிணாமுல் எம்பி காட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,CR Park ,Delhi ,Trinamool ,Katham ,NEW DELHI ,TRINAMUL ,Mahua Moitra ,Trinamul Congress Party ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...