×

வெறுப்பு உணர்வு, பிரிவினை அரசியல் முஸ்லிம், கிறிஸ்தவர், தலித்கள்…யாரையும் பாஜ விட்டு வைக்காது: வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி மாறன் எம்.பி பேச்சு

புதுடெல்லி: மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் மத்திய சென்னை எம்.பியும், திமுக நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவருமான தயாநிதி மாறன் பேசியதாவது: வக்பு சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முக்கியக் காரணம் எண்ணிக்கைகளில் தெரிகிறது: 71, 62, 36. இவை என்னவென்று தெரியுமா? 2014இல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக வென்ற எம்பி இடங்கள் 71, 2019இல் 62, 2024இல் 36. 1990இல், ‘பாபர் மசூதியை இடிக்க வேண்டும், அங்கு ராமர் கோயிலைக் கட்ட வேண்டும், ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி 71 இடங்களைப் பிடித்தார்கள். பின்னர் அவர்களின் செல்வாக்கு சரிந்து, 36 இடங்களுடன் ராமர் கோயிலைத் திறந்தார்கள். இஸ்லாமியர்களிடமிருந்து பாபர் மசூதியைப் பறித்ததோடு, இந்துக்களிடமிருந்து, குறிப்பாக ஏழை விவசாயிகளிடமிருந்து, சுமார் 4,500 ஏக்கர்களைப் பறித்தார்கள். விமான நிலையங்கள், சாலைகள், பணக்காரர்களுக்காக ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் கட்டுவதற்காக இதைச் செய்தார்கள்.

இதன் விளைவு என்ன? 2024 தேர்தலில் அயோத்தியில் வெற்றி பெற்றவர் யார்? சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் 56,811 வாக்குகளால் வென்றார். இதை அவர்களால் தாங்க முடியவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பைத் தூண்டினால் மட்டுமே தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்கு காரணம் வெறுப்பு, வெறுப்பு உணர்வு, பிரிவினை அரசியல் மட்டுமே. ஏர் இந்தியாவை ரூ.16,000 கோடிக்கு விற்றீர்கள், ஆனால் அதன் கடன் ரூ.63,000 கோடி. உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி போன்றோருக்கு ரூ. 4.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தீர்கள். அதற்கு மசோதா கொண்டுவரவில்லையே? இப்போது பெண்களுக்காக என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் வக்பு வாரியத் தலைவராக ஒரு பெண் இருந்திருக்கிறார்.

உண்மையில், உங்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் வெற்றி வேண்டும். அங்கு வென்றால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். வக்பு நிலங்களைப் பார்த்தால், இந்தியாவில் 8,70,000 சொத்துக்கள், 9,40,000 ஏக்கர்கள், சுமார் 1.2 லட்சம் கோடி மதிப்பு உள்ளது. இதில் 25% உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதை விட்டுவிடுவீர்களா? ஏன் இந்தப் பிரிவினைவாதம்? இந்த அரசு சிறுபான்மையருக்கு எதிராகவே செயல்படுகிறது. வாஜ்பாய் காலத்தில் ஒரு இஸ்லாமிய அமைச்சர் இருந்தார். இப்போது உங்களிடம் ஒரு இஸ்லாமிய எம்பி கூட இல்லை. முதலில் இஸ்லாமியர்களை ஒழித்தார்கள், அடுத்து கிறிஸ்தவர்களை ஒழிப்பார்கள், பின்னர் தலித்களை ஒழிப்பார்கள், பின் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள். நீங்கள் பசுத்தோலைப் போர்த்திய புலியைப் போல் மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கி அரசியல் செய்கிறீர்கள். இதைச் செய்யாதீர்கள். இவ்வாறு தயாநிதி மாறன் எம்.பி பேசினார்.

 

The post வெறுப்பு உணர்வு, பிரிவினை அரசியல் முஸ்லிம், கிறிஸ்தவர், தலித்கள்…யாரையும் பாஜ விட்டு வைக்காது: வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாநிதி மாறன் எம்.பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dalits… ,BJP ,Dayanidhi Maran ,New Delhi ,Lok Sabha ,Central ,Chennai ,Vice President ,DMK Parliamentary Group ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...