×

மின் இணைப்பில் ஆதாரை சேர்க்கும் விவகாரம் தமிழ்நாடு அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் உயர் நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து நிவாரணம் கேட்கலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து சீராய்வு மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசாணை என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post மின் இணைப்பில் ஆதாரை சேர்க்கும் விவகாரம் தமிழ்நாடு அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,Aadhaar ,New Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...