பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 27 கிலோ நகைகள், ஆயிரம் ஏக்கர் நிலம் ஆகியவற்றை கர்நாடக கருவூலத்தில் இருந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம் வெள்ளி வைரம் நகைகளையும் 1562 ஏக்கர் நில பத்திரங்களையும் பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி எச். வி.மோகன் கடந்த ஜனவரி 29ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு நேற்று காலை தமிழ்நாடு உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி. விமலா, கூடுதல் எஸ்.பி. புகழ்வேந்தன், இரு உதவி போலீஸ் கமிஷனர்கள், இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், முப்பது போலீசார் மற்றும் ஆபரண மதிப்பீட்டாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர் வந்தனர். நீதிமன்றத்தில் நேற்று காலை 11.10 மணிக்கு நீதிபதி மோகன் இருக்கையில் அமர்ந்தார். அப்போது ஜெ. தீபா சார்பில் ஆஜரான வக்கீல், ஆபரணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
அம்மனு சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆகவே வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்றார். ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்காமல், உச்சநீதிமன்றம் தடைவிதித்தால் பார்க்கலாம், அதுவரை ஆபரணங்களை ஒப்படைக்கும் பணி தொடரட்டும் என்று உத்தரவிட்டார். அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆபரணத்தையும் சரி பார்த்து வழங்கும் பணி தொடங்கியது. இதற்கிடையே ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது. நேற்று காலை 11.30 மணிக்கு ஆபரணங்கள் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. பகல் 1.45 மணி வரை 157 ஆபரணங்கள் மதிப்பீடு செய்து தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின் பகல் 3.05 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது. மாலை 5.45 மணி வரை ஆபரணங்கள் மதிப்பீடு செய்து 296 பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போலீசாரின் பாதுகாப்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு சொந்தமான வாகனத்தில் மீண்டும் ஆபரணங்கள் அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கருவூலத்தில் இருந்து இன்று மீண்டும் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டு மீதமுள்ள பொருட்கள் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.
* ஆர்டிஆர் ஆர்வலர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
தமிழ்நாடு லஞ்ச-ஒழிப்பு போலீசார் கடந்த 1996ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். பத்தாண்டுகள் வரை தமிழ்நாட்டில் இருந்த ஆபரணங்கள் பின் பெங்களூரு தனி நீதிமன்ற உத்தரவின் நேரில் கர்நாடகாவுக்கு கொண்டுவரப்பட்டது. இவ்வழக்கில் தனி நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தீர்ப்பு வழங்கி 7 ஆண்டுகள் கடந்தும் பெங்களூருவில் இருந்து சொத்துகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்காமல் இருந்தது. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மூலம் கருவூலத்தில் முடங்கி இருந்த ஆபரணங்களுக்கு மீண்டும் உயிர் கிடைத்தது. அவரது மனு மீது விசாரணை நடத்திய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஆபரணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் மகத்தான உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* பளபளக்கும் ஆபரணங்கள்
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஆபரணங்கள் கடந்த 29 ஆண்டுகளாக பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு கருவூலத்தில் இருந்து ஆபரணங்கள் நேற்று காலை நீதிபதி எச்.வி.மோகன் முன்னிலையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க எடுத்தபோது, ஆபரண ஷோரூமில் புதியதாக வாங்கும் ஆபரணம் எப்படி பளபளப்பாக இருக்குமோ அதேபோல் பளபளப்பாக இருந்தது.
* தமிழ்நாடு அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம்
கடந்த 1996ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச-ஒழிப்பு போலீசார் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த 27 கிலோ தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூ.3.65 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 29 ஆண்டுகளில் இதன் மதிப்பு ரூ.45 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த 1,562 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு குறைந்த ஏக்கர் ஒன்று ரூ.1 முதல் 1.50 கோடியாக இருந்தாலும் 1,562 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.1,700 முதல் 1,900 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். ரூ.66.64 கோடி வருமானத்திற்கும் அதிகம் வருமானம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 29 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைத்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம், 1562 ஏக்கர் நிலம் தமிழக போலீசிடம் ஒப்படைப்பு: பெங்களூரு நீதிபதி முன்பு அதிகாரிகள் பெற்று கொண்டனர் appeared first on Dinakaran.
