×

30 எம்எல்ஏக்கள் அதிருப்தி எதிரொலி பஞ்சாப் முதல்வராகிறாரா கெஜ்ரிவால்? லூதியானா இடைத்தேர்தலில் போட்டியிட திட்டம், முதல்வர், அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை

சண்டிகர்: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை அடுத்து பஞ்சாப்பில் 30 எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வராக கெஜ்ரிவால் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி படுதோல்வி அடைந்தது. கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட தோல்வி அடைந்துவிட்டனர். இந்த பாதிப்பு பஞ்சாப் மாநிலத்திலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது.

பஞ்சாபில் கடந்த 2022ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று, டெல்லியை போல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 18 இடங்களிலும், சிரோமணி அகாலி தளம் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது டெல்லி தோல்விக்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

30 ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில்,’ பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. அந்த கட்சியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். இங்கு கடந்த 6 மாதமாக அமைச்சரவை கூட்டப்படவில்லை’ என்று கூறினார்.

பஞ்சாப் ஆம்ஆத்மியில் அதிருப்தி நிலவுவதாக கூறபட்ட தகவலை தொடர்ந்து நேற்று டெல்லி கபுர்தலா இல்லத்தில் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுடன்,பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அமைச்சர்கள், ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் அவசரமாக சந்தித்து பேசினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் பஞ்சாப் ஆம்ஆத்மி எம்.பி.க்கள் ராகவ் சதா, சந்தீப் பதக் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் தோல்வி அடைந்து விட்டதால் பஞ்சாப் அரசியலில் கெஜ்ரிவால் களமிறங்கவும், குறிப்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு பதில் புதிய முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள லூதியானா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடுவது குறித்த விவாதங்கள் நேற்று நடந்த ஆம்ஆத்மி ஆலோசனை கூட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி மற்றும் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* பஞ்சாப் முதல்வராகும் கனவை கெஜ்ரிவால் நிறுத்த வேண்டும்: பா.ஜ விளாசல்
மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டனில் இருந்து பா.ஜ சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவும், முன்னாள் ஆம்ஆத்மி தலைவருமான மஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில்,’ டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த போதிலும், பஞ்சாப் எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று கனவு காண்கிறார்.

தண்ணீரில் இருந்து வெளியே வரும் மீனைப் போல, கெஜ்ரிவாலால் அதிகார சொகுசு இல்லாமல் வாழ முடியாது. பஞ்சாப் மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். பலரின் ஆணவத்தை தகர்த்தவர்கள். எனவே பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று கனவு காண்பதை கெஜ்ரிவால் நிறுத்த வேண்டும்’ என்றார்.

* அணி மாறுவது காங்கிரசின் கலாச்சாரம்: முதல்வர் பகவந்த்மான் தாக்கு
டெல்லியில் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று கூறுகையில்,’ அணி மாறுவது காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம்; அவர்கள் மற்றவர்களைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் தங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. டெல்லியில் அவர்களுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 20 அல்லது 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தொடர்ந்து கூறி வருகிறார். அதை அவர்கள் சொல்லட்டும்’ என்றார்.

* பஞ்சாப்பை ஏடிஎம்மாக பயன்படுத்துகிறார்
ஆம்ஆத்மி கட்சியின் அதிருப்தி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால் கூறுகையில் ,’ சிலர் பஞ்சாப்பை தங்கள் தனிப்பட்ட ஏ.டி.எம்., என கருத துவங்கியுள்ளனர். இன்று, பஞ்சாபில் பெரும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் பஞ்சாப் மக்களும், பல எம்எல்ஏக்களும் கோபமடைந்துள்ளனர். டெல்லியில் தோல்வியை சந்தித்ததிலிருந்து, தனது அரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர் பஞ்சாப் செல்ல திட்டமிட்டுள்ளார்’ என்றார்.

The post 30 எம்எல்ஏக்கள் அதிருப்தி எதிரொலி பஞ்சாப் முதல்வராகிறாரா கெஜ்ரிவால்? லூதியானா இடைத்தேர்தலில் போட்டியிட திட்டம், முதல்வர், அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Punjab ,CM ,Ludhiana ,Chandigarh ,Delhi Assembly elections ,Congress ,Aam Aadmi Party ,Delhi Assembly ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது