×

கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.42.70 கோடியில் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்துமிடத்தில் உணவகங்கள், தங்குமிடங்கள், ஒப்பனை அறைகள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன், ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்துகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.

இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடியில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் தொல்லியியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் கண்காட்சி மேடைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மருத்துவர்கள் ஆலோசனை அறை, செவிலியர்களுக்கு தனி அறை, 3 மருத்துவ படுக்கை வசதிகளை உள்ளடக்கிய அவசர சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருந்தகம், 50 பேர் ஒரே நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் காத்திருப்பு கூடம், ஒப்பனை அறைகள், மருத்துவ அவசர ஊர்திகள் நிறுத்துமிடம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.58 கோடியே 70 லட்சம் செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, அப்போலோ மருத்துவமனையின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் இருந்து காணொலி காட்சி வாயிலாக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்சல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Omni Bus ,Kalambakam ,Artist Centenary Climate Park ,Mudichur ,Chief Minister ,M K Stalin ,CHENNAI ,Chennai Metropolitan Development Corporation ,Kalyankar Centenary Bus Terminal ,Klambakkam ,Artisan Centenary Climate ,Park ,Kalambach ,Omni Bus Stand ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...