×

நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்

 

நெல்லை: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது. பொங்கலை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய வாகன சோதனை நடந்தது. 600 போலீசார் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லை மேலப்பாளையத்திற்கு நாட்டுத் துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மேலப்பாளையம், அக்பர் தெருவைச் சேர்ந்த ஆமீர் சுகைல் (24) என்பவரது வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் 4 தோட்டக்களை பறிமுதல் செய்த போலீசார், ஆமீர் சுகைலை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பெருமாள்புரம், இன்ஜினியர் காலனியைச் சேர்ந்த ரத்தின பாலன் (38), மேலப்பாளையம், ரகுமானியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சாகுல் முசமில் முர்சித் (21) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரத்தின பாலன் மற்றும் முசமில் முர்சித்தையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் ஆயுதத் தடைச் சட்டப்பிரிவுகள் 25(1), 27(1), அமைப்பு ரீதியான குற்றங்களை தடுக்கும் சட்டமான பிஎன்ஸ் 111(4), பயங்கர ஆயுதத்துடன் சட்டவிரோதமாக ஒன்று கூடுதலை தடுக்கும் பிஎன்எஸ் 191(2), 191(3) ஆகிய கடும் சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் பிரமுகரான ரத்தினபாலன் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்தத் துப்பாக்கியை விற்க முடிவு செய்து ஆமீர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோர் உதவியுடன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை ரத்தினபாலன் விற்றுள்ளார்.

மேலப்பாளையம் வாலிபர்கள் ரூ.1.2 லட்சத்துக்கு வாங்கி திண்டுக்கல் முக்கிய பிரமுகருக்கு ரூ.1.5 லட்சத்துக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. அந்த துப்பாக்கியை சுட்டுப்பார்த்த திண்டுக்கல்லின் முக்கிய பிரமுகர் ‘மிஸ் பயர்’ ஆனதால் அதிர்ச்சியடைந்தார். அதனால் அந்தத் துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக்கூறி, வாங்கியவர் அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். துப்பாக்கி திரும்ப வந்த தகவல் அறிந்து, போலீசார் சுற்றி வளைத்ததில் தற்போது 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாகத் திண்டுக்கல்லைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்வதற்காக, நெல்லை தனிப்படை போலீசார் நேற்று திண்டுக்கல் விரைந்தனர். அங்கு தீவிர விசாரணை நடத்திய போலீசாரிடம் திண்டுக்கல், பேகம்பூரைச் சேர்ந்த ஷாகுல் (45) என்பவர் சிக்கினார்.

இவர்தான் துப்பாக்கியை மேலப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் இருந்து கள்ளத்தனமாக வாங்கிவிட்டு சரியாக சுடவில்லை என திருப்பிக்கொடுத்தவர் எனக்கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கிலும் தொடர்புடையர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த ஷேக் (25) என்பவரும் சிக்கினார். இருவரையும் நேற்று மாலை நெல்லை போலீசார் ைகது செய்தனர். கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு அடுத்தடுத்து 5 பேரை கைது செய்துள்ளனர்.

Tags : Nellai ,Dindigul ,Nellai Municipal Police ,Commissioner ,Manivannan ,Pongal ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...