சென்னை: குற்றப் பின்னணி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல் 2018 ஆண்டுக்கு பிறகு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு உச்ச நீதி மன்றம், உடனடியாக அனைத்து மாநில பார் கவுன்சில் தேர்தல்களை இந்த வருடம் 2026 ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலின் போது அன்றைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு, குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும், தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினரின் 10 ஆண்டுகால வருமானம் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகித்தவர் மீண்டும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை உத்தரவு பெற்றார். 2018 ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான வழக்கறிஞர்கள், குற்ற பின்னணி உள்ளவர்கள். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2025 ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பார் கவுன்சில் ஆப் இந்தியா குற்றப் பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. எனவே, ஏதாவது ஒரு குற்ற வழக்கில் ஏழு வருடத்திற்கும் மேற்பட்ட தண்டனைக்குரிய குற்றப் பின்னணி உள்ள நபரை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடவும், உறுப்பினராக தேர்ந்தெடுக்கவும் தடை விதிக்க வேண்டும்.
இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவி வகித்தவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். பார் அசோசியேசன் தேர்தலில் வெற்றி பெற்று பதவி வகிப்பவர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். பெண்களுக்கு பார் கவுன்சில் தேர்தலில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது போல பட்டியல் மற்றும் பழங்குடியின வழக்கறிஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
