சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். செல்வபெருந்தகை – தமிழக காங்கிரஸ் தலைவர்: உழைப்பின் உயர்வினை உலகிற்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும் அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் திருநாளை தமிழினத்தின் பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
வைகோ – மதிமுக பொதுச்செயலாளர்: இயற்கை அன்னையின் கொடைக்கு விழா எடுப்போர் உலகில் தமிழர்களே. உழவர்கள் ‘இயற்கைக்கும், நிலத்தை உழுதற்கும், கழனி விளைதற்கும் உற்றுழி உதவிடும் கால்நடைச் செல்வத்துக்கும் படையல் செய்து நன்றிப் பெருக்கு ஆற்றும் விழாவன்றோ பொங்கல் திருவிழா.
அன்புமணி பாமக தலைவர் : அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும்.
சண்முகம்-சிபிஎம் மாநிலச் செயலாளர்: அநீதிகளை அழிக்கிற புதிய புதிய போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி வெளிவந்தே தீரும். பிறக்கிற தை வாழ்க்கையை வளமாக்கட்டும்.
வீரபாண்டியன் – சிபிஐ மாநில செயலாளர் : தை பிறந்தாள் வழி பிறக்கும் என்ற தன்னம்பிக்கை தரும் தை திருநாளில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மதவாத, சாதி வெறி, சமூக விரோத பிற்போக்கு சக்திகளை முற்றாக நிராகரித்து மதசார்பற்ற முற்போக்கு கருத்துகளுக்கு வலுவூட்டி மகத்தான வெற்றி பெற உறுதியேற்போம்.
ஓ.பன்னீர்செல்வம் – முன்னாள் முதல்வர் : விவசாயிகள் உட்பட அனைவரின் வாழ்வில் ஏற்றங்கள் உருவாகும் வண்ணம் மாற்றங்கள் ஏற்படவும், இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும், உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்.
திருமாவளவன் – விசிக தலைவர் : தமிழினம் வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு சாதிகளையும் கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் முன்னிறுத்தாமல், அல்லது அவற்றின் தாக்கத்திற்கு ஆட்படாமல், தமது தனித்துவத்தைச் சிதையவிடாமல் கட்டுக்கோப்புமிக்க பண்பாட்டு உறுதிப்பாட்டுடன் வீறுநடைபோடுவது நம் ஒவ்வொருவருக்கும் தலைநிமிர்வைத் தருகிறது. அத்தகைய பெருமையோடு தமிழ் மக்கள் யாவரும் மகிழ்வோடு கொண்டாடும் இப்பெருநாளின் மகத்துவம் சிதைவுறாமல் அது மென்மேலும் செம்மையுறவும்; பண்பாட்டுத் திரிபுவாத கும்பலின் சதிமுயற்சிகளை முறியடித்து அதனைப் பாதுகாக்கவும்; தை முதல் நாளான பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்.
எர்ணாவூர் நாராயணன் – சமக தலைவர் : பிறக்கும் தை திருநாள் உழவர்களுக்கு நலம் சேர்க்கும் ஆண்டாக அமைய வேண்டும். இயற்கை அன்னை, நமக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தேவையான அளவு மழை தந்து தன்னிறைவு காண அருள வேண்டும்.
எம்.வி.சேகர்-கோகுல மக்கள் கட்சி தலைவர்: தைப்பொங்கல் திருநாளில் ஏழ்மை அகன்று எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என சித்தாந்தத்தின் அடிப்படையில் இன, மத பேதங்கள் இல்லாமல் ஒற்றுமையாய் வாழ தமிழர் திருநாளான பொங்கல் நாளில் சபதமேற்போம்.
சேம.நாராயணன்-தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர்: புதிய மண்பானையில் புது அரிசியிட்டு பொங்கலோ, பொங்கல் என்று பொங்குவது போல எல்லோருடைய மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இவர்களை தவிர, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி, தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே. ராமசந்திரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தனபால், விஜய் வசந்த் எம்.பி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா,மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா , நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவெலபேர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, இந்தியா நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் , தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
