![]()
குந்தி: நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ரூ.24ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பிறந்த நாள் மற்றும் மூன்றாவது ஜன்ஜதியா கவுரவ் திவாஸ் நேற்று கொண்டாடப்பட்டது. ஜார்கண்ட் சென்ற பிரதமர் மோடி, ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திர போராட்ட வீரர் அருங்காட்சியகத்தில் உள்ள பிர்சா முண்டாவின் 25அடி உயர சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘பழங்குடியின வீரர்களுக்கு நாடு எப்போதும் கடமைப்பட்டு இருக்கும்” என்றார்.
இதனை தொடர்ந்து குந்தி மாவட்டத்தில் உள்ள பிர்சா கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.24,000கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் மாநிலத்தில் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் குறித்து ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு சாலை மற்றம் தொலை தொடர்பு இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புக்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ரூ.18ஆயிரம் கோடி நிதி விடுவிப்பு
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 15வது தவணை தொகையாக ரூ.18ஆயிரம் கோடியை விடுவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2ஆயிரம் ஆண்டுக்கு 3 தவணைகள் அதாவது ரூ.6ஆயிரத்தை ஒன்றிய அரசு செலுத்தி வருகின்றது. இதனிடையே சட்டீஸ்கர் 2வது கட்ட தேர்தல் மற்றும் மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பிரதமரின் கிசான் திட்டத்திற்கான தவணை தொகை விடுவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் இது உள்நோக்கம் கொண்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
* விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்ரா
ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தகுதியுடைய ஆனால் இதுவரை பயனடையாத பொதுமக்களை சென்றடையும் வகையில் நாடு தழுவிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரமான விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 5 பிரசார வாகனங்களை குந்தியில் பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஜனவரி 24ம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.
The post பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக ரூ. 24,000 கோடி: ஜார்கண்டில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.
