திருமலை: தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் சந்திரசேகரராவ் வேட்புமனுவுக்கு சிறப்பு பூஜை செய்தார். தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்(கேசிஆர்), அமைச்சர் ஹரிஷ்ராவ் ஆகியோர் சித்திப்பேட்டை மாவட்டம் கோனயப்பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு நேற்று தங்கள் வேட்பு மனுக்களுடன் சென்றனர்.
பின்னர், அங்கு வெங்கடேஸ்வர சுவாமி பாதத்தில் வேட்பு மனுக்களை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து, வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டனர். வருகிற 9ம்தேதி கஜ்வெல் மற்றும் கமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் முதல்வர் சந்திரசேகரராவ் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். முதல்வரை எதிர்த்து தேர்தல் மன்னன் வேட்பு மனு தாக்கல்: தெலங்கானா வேட்பு மனு தாக்கல் முதல் நாளில் சுயேச்சை வேட்பாளரான தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது 237வது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் இந்தியாவில் இதுவரை 236 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
The post 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனுவுக்கு சிறப்பு பூஜை செய்த தெலங்கானா முதல்வர் appeared first on Dinakaran.
