சென்னை: ஆதித்யா எல்1 விண்கலம் பூமி மற்றும் நிலவை படம்பிடித்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது. சூரியனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் ஆதித்யா எல் 1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தற்போது செயல்படுத்தியுள்ளது. இதற்காக கடந்த 2ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 63வது நிமிடத்தில் ஆதித்யா விண்கலம் ராக்கெட்டின் கடைசி பாகத்தில் இருந்து பிரிந்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து 4 மாதங்கள் லிக்விட் அப்போஜி மோட்டார் மூலம் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட்டை மையமாக கொண்டு ஒளிவட்ட பாதைக்கு சென்றடையும். லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்ட பாதையில் பயணித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும். தற்போது புவி வட்டபாதையில் சுற்றி வரும் ஆதித்யா விண்கலம் இரண்டு சுற்றுகளை முடித்து 2ம் கட்ட உயரம் அதிகரிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆதித்யா விண்கலத்தின் விஇஎல்சி, சூட் ஆகிய 2 பேலோடுகள், பூமி மற்றும் நிலவை விண்கலம் படம் பிடித்துள்ளது. அதில் பூமியின் ஒரு பாதியில் மட்டும் சூரிய ஒளியும், பூமிக்கு அருகில் ஒரு சிறிய புள்ளியை போல நிலவும் இருப்பதை ஆதித்யா விண்கலம் படம்பிடித்துள்ளது. கடந்த 4ம் தேதி எடுத்த வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பூமி – சூரியன் இடையே உள்ள எல்1 லெக்ராஞ்சியன் பாயிண்ட்டை நோக்கிய தனது பயணத்தில் ஆதித்யா விண்கலம் பூமி, நிலவை படம் எடுத்துள்ளது.மேலும் தன்னை ஒரு செல்பியும் எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பூமி மற்றும் நிலவை படமெடுத்த ஆதித்யா எல்1 விண்கலம்: வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ appeared first on Dinakaran.
