டெல்லி: மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மணிப்பூர் கொடூரத்தை மோடி பேச வேண்டும் என்பதை வலியுறுத்திதான் மக்களவையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மணிப்பூர் வீடியோ தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும், விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மணிப்பூர் வீடியோ விவாகரம் தொடர்பாக பிரதமர் இதுவரை பதில் அளிக்காத நிலையில் நாடாளுமன்றம் 5வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. எதிர்கட்சியினர் ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் விவாதத்திற்கு ஏற்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாவது: மணிப்பூரில் நடக்கும் பிரச்னைக்கு எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறோம். மணிப்பூர் வன்முறை மற்றும் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
The post மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்! appeared first on Dinakaran.
