இம்பால்: மணிப்பூர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசக்கோரி ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டின் மீது பெண்கள் சிலர் கல்வீசி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே 2 மாதத்திற்கு மேலாக வன்முறை நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டக் கோரி, பல்வேறு அமைப்பினரும் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் இம்பாலில் நேற்று பெண்கள் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பெண்கள் பலர் பங்கேற்றனர். பேரணியாக சென்ற அவர்கள் கொங்பா பகுதிக்கு வந்த போது, அங்குள்ள ஒன்றிய வெளியுறவு துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டை திடீரென முற்றுகையிட்டனர். சிலர் அமைச்சர் வீட்டை நோக்கி கற்களை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படையினர், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அளித்த பேட்டியில், ‘‘மணிப்பூர் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரஞ்சன் சிங், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னை குறித்து குரல் கொடுக்க வேண்டும். இங்கு நிலவும் அமைதியின்மை குறித்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவது அவரது முழு பொறுப்பு. அமைச்சரின் வீடு தாக்கப்படுவது இது 2வது முறை.
இதே போல, மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரும் நேற்று இம்பாலில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து அமைதிப் பேரணி நடத்தினர். அப்போது அனுமதிக்கப்பட்ட பகுதியை தாண்டி பேரணி செல்ல முயன்றதால் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை தோர்பங்க் பஜாரில் உள்ள உயர்நிலைப் பள்ளியை பெண்கள் தலைமையிலான போராட்டக் குழு தீ வைத்து எரித்தது. பெண்களை மனித கேடயமாக பயன்படுத்திய அக்குழு, கைவிடப்பட்ட வீடு உள்ளிட்ட கட்டிடங்களுக்கும் தீவைத்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வந்த வாகனத்தையும் போராட்டகாரர்கள் திருட முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
* ஆர்எஸ்எஸ் நிர்வாகி குறித்து சர்ச்சை பதிவு
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகியும் அவரது மகனும் நேரடியாக சம்மந்தப்பட்டிருப்பதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாக பரவியது. இதுதொடர்பாக சில புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளன. இந்த பதிவு குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பழங்குடியின பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீடியோ காட்சிகள் மூலம் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
* பாஜ எம்எல்ஏ மீது மின்சாரம் பாய்ச்சிய கும்பல்
மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி வன்முறை தொடங்கிய நிலையில் அதற்கு அடுத்த நாள் பாஜவை சேர்ந்த குக்கி இனத்தின் எம்எல்ஏ உங்ஜாகின் வால்டே, முதல்வர் பிரேன் சிங்கை அவரது வீட்டில் சந்தித்து விட்டு திரும்பி உள்ளார். அப்போது மெய்திஸ் பிரிவை சேர்ந்த வன்முறை கும்பல் எம்எல்ஏ வால்டேவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது. எம்எல்ஏவின் டிரைவர் அடித்தே கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் வால்டேவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு, படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2 மாத சிகிச்சைக்கு பின் அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். குக்கி இனத்தை சேர்ந்த ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய குக்கி இன மக்களின் நிலைமை எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சி.
The post மணிப்பூர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசக்கோரி ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங் வீட்டின் மீது பெண்கள் கல்வீச்சு: பேரணியின் போது முற்றுகையிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.
