×

மகளிர் உரிமைத்தொகை திட்டம் 8 மாநிலங்களில் நிறைவேற்றம்

ஓசூர், ஏப்.16: தமிழகத்தை பின்பற்றி மகளிர் உரிமைத்தொகை திட்டம் 8 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரசாரத்தின்போது ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ பெருமிதத்துடன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் சத்யா, ஓசூர் மாநகராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தார். கேசிசி நகர், சின்ன எலசகிரி, ஜூஜூவாடி, பாரதியார் நகர், பாகலூர் அட்கோ, வசந்த் நகர், முனீஸ்வர் நகர், ராம்நகர், காந்தி சிலை, தேர்ப்பேட்டை, பாரதிதாசன் நகர், ஏரித்தெரு, ரயில்வே நிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினார்.

ஜூஜூவாடியில் நடைபெற்ற பிரசாரத்தில், அவருக்கு ஆதரவாக ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ பேசுகையில், `திமுக அரசு மீண்டும் அமைந்ததும், காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும். 5 ஆண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அறிமுகம் செய்த மகளிர் உரிமைத்தொகை திட்டம், 8 மாநிலங்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே, ஓசூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சத்யாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின் போது, மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன், அவைத் தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனை திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தனர்.

Tags : Hosur ,Hosur Prakash ,MLA ,Tamil Nadu ,Sathya ,DMK ,Secular Progressive Alliance ,Krishnagiri district ,Hosur Corporation ,
× RELATED ஆண்டு முழுவதும் தண்ணீர் வர திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும்