×

ஆண்டு முழுவதும் தண்ணீர் வர திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.16: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதியழகன் எம்எல்ஏ தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒரப்பம், மருதேப்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, பெண்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, பொதுமக்கள் மத்தியில் மதியழகன் எம்எல்ஏ பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார். அந்த திட்டங்களால் பயனடையாத பொதுமக்கள், யாரும் இருக்க முடியாது என்ற அளவிற்கு திட்டங்களை திறம்பட செயல்படுத்தினார். ஒவ்வொரு துறையிலும் சிறப்பு கவனம் செலுத்தி, அதன் மூலம் மக்கள் பயனடைய செய்தார். அதேபோல், இந்த பகுதியில் உள்ள படேதலாவ் கால்வாயில் தண்ணீர் வராமல் இருந்தது. படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் வந்தால், அதன் மூலம் பர்கூர் தொகுதியில் உள்ள 13 ஏரிகளுக்கு நீராதாரம் கிடைக்கும்.

அவ்வாறு தண்ணீர் திறந்து விடப்படுவதால், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனவே, படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.300 கோடி மதிப்பில் எண்ணேகொல் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 8 மாதங்களில் இந்த திட்டம் நிறைவடையும். அதன் பின்பு வருடம் முழுவதும் படேதலாவ் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படும். அதன் மூலம் விவசாயம் மேம்படும். இந்த திட்டத்தை விரைந்து முடிக்க, திமுகவிற்கு வாக்களித்து என்னை வெற்றிப்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் உறுதியளித்து வாக்கு சேகரித்தார். அவருடன் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், தொகுதி பொறுப்பாளர் பார்.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், காந்தி மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தனர்.

Tags : DMK ,Krishnagiri ,Mathiyazhagan ,MLA ,Barkur ,Krishnagiri district ,Orappam ,Marudepalli ,Achamangalam ,
× RELATED மகளிர் உரிமைத்தொகை திட்டம் 8 மாநிலங்களில் நிறைவேற்றம்