கிருஷ்ணகிரி, ஏப்.12: கிருஷ்ணகிரியில் இறுதி வாக்காளர் பட்டியல், 6 தொகுதிகளில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெளியிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல், 6 சட்டமன்ற தொகுதிகளில் மாற்றங்கள், திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், வரும் 23ம் தேதி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 2,093 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஓசூர் சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடி எண் 171ல் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,200க்கும் அதிகமாக உள்ளதால், அதே இடத்தில் 171கி என்ற புதிய துணை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 17 வாக்குச்சாவடிகள் இடமாற்றமும், 16 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றமும், 17 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) ஹெலன் ராணி, கிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவக்குமார், அபிநயா, ஷாஜகான், கீதாராணி, ஆக்ரிதி சேத்தி, பழனி, தனி தாசில்தார் (தேர்தல்) சம்பத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
