ஓசூர், ஏப்.13: ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக விற்பனையாகாமல் சுமார் 3 லட்சம் பன்னீர்ரோஜா நாற்றுக்கள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதமான சீதோஷ்ண நிலை மற்றும் நல்ல மண்வளம் காரணமாக ஏளாமான விவசாயிகள் திறந்து வெளியிலும், பசுமை குடில்களிலும் பல்வேறு வகையான ரோஜா சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் ரோஜா மலர்கள் உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஓசூர் மற்றும் சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தளி ஆகிய பகுதிகளில் கொய்மலர்களை போன்று நறுமணம் மிகுந்த பன்னீர் ரோஜாக்களையும் விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
அறுவடை செய்யப்படும் பன்னீர்ரோஜா மாலை தொடுக்கவும், வாசனை திரவியங்கள் மற்றும் குல்கந்த் தயாரிக்கவும் அதிகளவில் பயன்படுவதால், ஓசூரிலிருந்து கேரளம் மாநிலத்திற்கு தினமும் 500 கிலோ அளவிற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேவை அதிகரிப்பால், பன்னீர்ரோஜா நாற்று உற்பத்தியும் அதிகரித்துள்ளது. செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் தருவாயில் உள்ளூர் மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு விவசாயிகள் அனுப்பி வைத்தனர். கடந்த மாதம் பெய்த ஆலங்கட்டி மழைக்கு பிளாஸ்டிக் கவர்களில் வைத்திருந்த நாற்றுகள் உடைந்து சேதமடைந்தது. தற்போது, கடும் வெயிலின் காரணமாக தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை பகுதியில் நாற்றுகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மற்ற ரோஜாக்களை போன்று அல்லாமல் அதிகம் வாசம் உள்ள பன்னீர்ரோஜா ஓரிரு நாட்களிலேயே வாடி உதிர்ந்து விடும். இதனால், பன்னீர்ரோஜாவை பொறுத்தவரை குறைந்த அளவிலேயே சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், வடமாநிலம் மற்றும் கேரளம் மாநிலத்தில் வாசனை திரவியம், குல்கந்த் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பிற்காக பன்னீர்ரோஜா தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் விவசாயிகள் பன்னீர்ரோஜா சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தடிக்கல் உள்ளிட்ட பகுதியில் சுமார் 10 லட்சம் பன்னீர்ரோஜா நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாற்று ரூ.24 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சுட்டெரித்து வரும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நாற்றுகள் வாடி வதங்கி வருகிறது. மேலும், நிலத்தடியில் அதிகப்படியான வெப்பம் காரணமாக நாற்று வைத்தாலும் உரிய வளர்ச்சி கிடைப்பதில்லை. இதனால், நாற்றுகளை வாங்குவதற்கு யாரும் வராதததால், ஒரு நாற்று ரூ.10க்கும் குறைவாக விற்பனையாகி வருகிறது. இருதுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 லட்சம் பன்னீர்ரோஜா நாற்றுகள் தேக்கமடைந்துள்ளது. நாற்றுகள் வாடி விடாமல் இருக்க அவ்வப்போது தண்ணீர் தெளித்து வருகிறோம். மழை வந்தால் மட்டும் நாற்றுகள் விற்பனையாகும். இல்லை என்றால் பராமரிக்க முடியாமல் உற்பத்தி செய்த அனைத்து நாற்றுகளும் வீணாகி விடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
