தேன்கனிக்கோட்டை, ஏப்.14: தேன்கனிக்கோட்டை பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், மலர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் போதிய அளவிற்கு கோடை மழை பெய்யாததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் நீர் நிலைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளை நோக்கி படையெடுக்கின்றன.
தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் விவசாயிகள் பன்னீர்ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். கடும் வெயில் வாட்டி வதைப்பதால் மொட்டுகள் கருகி விடுகின்றன. ேமலும், மலர்கள் உதிர்கின்றன. இதனால், மகசூல் குறைந்துள்ளது, லட்சக்கணக்கில் செலவு செய்துள்ள விவசாயிகள் மகசூல் குறைந்துள்ளதால் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர். கோடை வெயிலால் மலர்கள் கருகி விடுவதாகவும், தரம் குறைந்துள்ளதால் உரிய விலையும் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
