×

பறக்கும் படை சோதனையால் போச்சம்பள்ளி சந்தையில் கால்நடைகள் விற்பனை டல்

போச்சம்பள்ளி, ஏப்.13: தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலியாக, போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு வியாபாரிகள் வரத்து சரிந்ததால், கால்நடைகள் விற்பனை டல் அடித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தை பிரசித்தம். இந்த சந்தையில் தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்பனை களை கட்டும். பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகள் விற்பனையாகும். வேலூர், திருண்ணமாலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மேட்டூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் கால்நடைகளை விற்கவும் -வாங்கவும் வருவர். இதன்மூலம் சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமாக ரொக்கம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் போச்சம்பள்ளி சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நேற்றைய சந்தைக்கு சுமார் 100க்கும் குறைவான ஆடுகள், 50க்கும் குறைவான மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த கால்நடைகளும் விற்பனையாகாததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்ப கொண்டு சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், `தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கம் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. பெரும்பாலும் துண்டு போட்டு தரகு அடிப்படையில் கால்நடை வர்த்தகம் நடைபெறுவதால், கொள்முதல் மற்றும் விற்பனை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை பராமரிப்பதில்லை. சந்தை நிலவரம் குறித்து அறியாமல் தேர்தல் பறக்கும் படையினர் பொருட்கள் கொள்முதலுக்காக வரும் வழியில், அப்பாவி மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். எனவே, வியாபாரிகள் ரொக்கம் கொண்டு வரும் வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Pochampally ,Pochampally, Krishnagiri district ,
× RELATED 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு...