×

சிறுமிகள் ஹெச்பிவி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.16:இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் என்பது 2வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் 1.20 லட்சம் பேர் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 80 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஹிமயூன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) வகை வைரஸ் 16 மற்றும் 18ல் ஏற்படுகின்றன. ஹெச்பிவி வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பாதிப்பை, ஹெச்பிவி தடுப்பூசி போடுவதன் மூலமாக தடுக்க முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு ெஹச்பிவி தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி மாதம் ெதாடங்கியது. 4 மாவட்டங்களுக்கு தேவையான டோஸ்கள் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பிலும் தமிழகத்திற்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டங்களில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் ஹெச்பிவி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஹெச்பிவி என்பது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸ் உடலில் நீண்டகாலம் இருந்து, பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. ஹெச்பிவி தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்க முடியும். முதற்கட்டமாக 14 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. குறிப்பாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி போட பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் அனுமதி அவசியமாகும். தடுப்பூசி போடுவதன் மூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பாதிப்பை தடுக்க முடியும்’’ என்றனர்.

Tags : Krishnagiri ,India ,
× RELATED மகளிர் உரிமைத்தொகை திட்டம் 8 மாநிலங்களில் நிறைவேற்றம்