×

வால்பாறை பகுதியில் தேயிலை தோட்ட பராமரிப்பு பணிகள் தீவிரம்

*தொழிலாளர்கள் ஊர் திரும்ப திட்டம்

வால்பாறை : வால்பாறை பகுதியில் சமீபத்தில் பெய்த கோடை மழையை தொடர்ந்து தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வால்பாறை பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டு உள்ளது. இப்பணிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மற்றும் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் தோட்ட பணிகள் வேகமடைந்துள்ளன. தேயிலை தோட்டங்களில் கவ்வாத்து, சால்வெட்டுதல், மரக்கிளை வெட்டுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக மே மாதங்களில் மேற்கொள்ளப்படும் சில பணிகளும் தற்போது முன்னதாகவே நடைபெற்று வருகிறது. தற்போது பல்வேறு எஸ்டேட்களில் கவ்வாத்து பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், ‘‘வடமாநில தொழிலாளர்கள் பலர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தங்கள் ஊர்களில் கோதுமை சாகுபடி செய்து விட்டு மீண்டும் வால்பாறைக்கு வந்துள்ளனர். தற்போது அவர்கள் தங்கள் வயல்களில் உள்ள கோதுமையை அறுவடை செய்யவும், உறவினர்களுக்கு உதவவும் ஊர் திரும்ப திட்டமிட்டு உள்ளனர்.

இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தற்போது தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன’’ என தெரிவித்தனர்.

Tags : Valparai ,
× RELATED தனியார் பேருந்தில் பயணித்த ஆந்திராவை...