×

மானாமதுரை வாலிபர் மரண வழக்கு போலீசார் மீது வன்கொடுமை வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் போலீசார் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு பதிய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய வாலிபர் ஆகாஷ் டெலிசன் கால் முறிவு ஏற்பட்டு மதுரை ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சையின்போது உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ்கண்ணன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்கப்பட்ட நிலையில், உடனடியாக உடற்கூராய்வு செய்யவும், அதன் அறிக்கை மற்றும் வீடியோவை மருத்துவக்கல்லூரியின் முதல்வர், ஆகாஷ் டெலிசனின் பெற்றோரிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதோடு ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை மறியல் கைவிடப்படாததால், அவ்வழியே பயணிப்போர், மாணவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, இதை வைத்து அரசியல் செய்ய நேரமில்லை. ஒருவேளை அது காவல் மரணமாக இருந்தால் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, நெடுஞ்சாலையில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடரலாம். நெடுஞ்சாலை பகுதியில் இருந்து இடம் மாற போராட்டக்காரர்கள் மறுத்தால் நீதிமன்றமே அகற்ற உத்தரவிட நேரிடும்.

போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த ஐகோர்ட் கிளை வழக்கறிஞர் கமிஷனர்களாக வழக்கறிஞர்கள் சாமிதுரை, மயில்வாகன ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இக்குழுவினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆகாஷ் டெலிசன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது தீண்டாமை வன்கொடுமை பிரிவின் கீழ் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.

* கண்களை கட்டி போலீசார் இரும்புக்கம்பியால் தாக்கினர் மாஜிஸ்திரேட்டிடம் வாலிபர் வாக்குமூலம்
மானாமதுரை மாஜிஸ்திரேட் எம்.அப்சல்பாத்திமா அளித்துள்ள கைது அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆகாஷ் டெலிசனை கைது செய்து மானாமதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், மார்ச் 6ம் தேதி மதியம் சுமார் 1.30 மணியளவில் கிளங்காட்டூரில் நண்பர் குணாவுடன் இருந்தபோது, சீருடையில் இல்லாத காவல்துறையினர் என்னை அழைத்துச் சென்றனர். பின்னர் மாலை நேரத்தில் எனது கண்களைக் கட்டி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், தனது காலை இரண்டு கற்களுக்கிடையில் வைத்து, ஈரச்சாக்கைப் போட்டு இரும்புக் கம்பியால் பலமாக அடித்தனர். இதனால் எனது வலது கால் எலும்பு முறிந்தது. பின்னர் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், ‘பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது’ என்று கூற வேண்டும் என மிரட்டினர். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் யார் தாக்கினர் என்பது தெரியவில்லை என வாக்குமூலத்தில் கூறியதாக மாஜிஸ்திரேட் தனது கைது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : HC ,Madurai ,Akash ,Akash Teleson ,Manamadurai police ,Sivaganga district ,GH ,
× RELATED வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு...