புதுச்சேரி ஊசுடு தொகுதியில் பாஜ நியமன எம்எல்ஏ தீப்பாய்ந்தான் வருகிற சட்டமன்ற தேர்தலில் தனக்கு தான் சீட் எனக்கூறி பொதுமக்களிடம் கூறி வருகிறார். ஆனால் தற்போதுள்ள எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சாய் ஜெ சரவணன்குமார் டெல்லி மேலிடம் தனக்கு தான் சீட் என்று கூறியுள்ளதாகவும், மக்கள் கவலைப்படாமல் இருங்கள் என்றும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தீப்பாய்ந்தான் எம்எல்ஏ இலவச பொருட்களை கொடுத்து ஓட்டு பெறும் முயற்சியில் தொகுதி முழுவதும் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் இலவசமாக குக்கரை வழங்கி ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் ரேஷன் கார்டுகளை பெற்று அதற்கு ேடாக்கன்களை விநியோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடப்பாக்கம்பேட் பகுதியில் தீப்பாய்ந்தான் எம்எல்ஏ இலவசமாக வழங்கிய குக்கரை பொதுமக்கள் நேற்று முன்தினம் பயன்படுத்தியுள்ளனர். அப்போது ஓரிரு வீடுகளில் சமையல் செய்ய குக்கரில் இட்லி ஊற்றி அடுப்பில் வைத்துள்ளனர். குக்கர் சில நிமிடங்களில் சூடாகியுடன் திடீரென குக்கரின் கண்ணாடி மேல்மூடி வெடித்து சிதறியுள்ளது. இதனால் பயந்துபோன அந்த பெண்கள் கேஸ் அடுப்பை நிறுத்திவிட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டு வாங்குவதற்காக தரமற்ற பொருட்களை வழங்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதா பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சரமாரி கேள்வி எழுப்புகின்றனர்.
