- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- நரேந்திர மோடி
- வளைகுடா பகுதி
- ஈரான்
- வளைகுடா
- இந்தியா
- மேற்கு ஆசியா…
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா பகுதிகளில் தொடரும் போர், இந்தியாவிற்கான எல்பிஜி விநியோகத்தினை வெகுவாக சீர்குலைத்துள்ளது. மேற்கு ஆசியாவில் இருந்து எல்பிஜி இறக்குமதியை இந்தியா அதிகமாக சார்ந்திருப்பது நிலைமையை மோசமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி தேவை மாதத்திற்கு சுமார் 200 மெட்ரிக் டன் என்றளவிலும், வணிக / தொழில் துறைகளின் தேவை மாதத்திற்கு மேலும் 20 மெட்ரிக் டன் என்றளவிலும் உள்ளது. விநியோக கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, தொழில் துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு எல்பிஜி விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறிய உணவகங்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளுக்கு எல்பிஜி விநியோகத்தையே சார்ந்துள்ள நிலையில், எல்பிஜி விநியோகத்தின் திடீர் நிறுத்தம் ஓட்டல் துறைக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதுடன், அவற்றில் பல மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெருமளவில் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில், பெரிய தொழில்கள் தவிர, அதிக எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் உள்ளது. பெரும்பாலான தொழில் துறை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு எல்பிஜி-யை பயன்படுத்தும் நிலையில், எல்பிஜி விநியோகத்தின் திடீர் நிறுத்தம் அவர்களை கடுமையாக பாதிக்கும். இதனால், மேலும் பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படவேண்டிய சூழலை எதிர்கொள்ள நேரிடும். இதனை ஈடுசெய்வதற்கான மாற்று எரிபொருள் மாற்றத்திற்கு அதிக காலமும், கணிசமான செலவும் ஏற்படும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்பிஜி விநியோகம் செய்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். முன்னெப்போதுமில்லாத இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு துணை நின்று, ஆதரவளிக்கும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
