சென்னை: மோடி அரசின் செங்குத்தான சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: மோடி தலைமையிலான பாஜ ஆட்சி நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே மோடி அரசின் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிக் கொடுமையினாலும், விலைவாசி உயர்வினாலும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு தற்போது எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது. இந்த விலை உயர்வினால் சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது.
இந்த எரிவாயு விலை உயர்வினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. சர்வதேச முதலாளிகள் தீர்மானிப்பதை இந்திய உழைப்பாளி மக்களின் தலையில் சுமத்தும் கார்ப்பரேட் ஆதரவு பாதையை மோடியின் ஆட்சி தீவிரப்படுத்துவது மேலும் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
