×

ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 551 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மொத்தம் ரூ.36.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்து, 551 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி சார்பில் கார்த்திகேயன் சாலையில் ரூ.68 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையக் கட்டிடம், ஜி.கே.எம். காலனி 29வது தெருவில் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையக் கட்டிடம், வ.உ.சி. தெருவில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடம், புளியந்தோப்பு, போகிபாளையத்தில் ரூ.1 கோடியே 90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை உருது துவக்கப் பள்ளி கட்டிடம், அயனாவரம், மதுரை தெருவில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டிடம், துரை சாமி மடம் சாலையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுத் திடல், பேப்பர் மில்ஸ் சாலையில் ரூ.36 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட உசைன் பூங்கா, பல்லவன் சாலையில் ரூ.33 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகக் கட்டிடம், பெரம்பூர் நெடுஞ்சாலை தெருவில் முரசொலி மாறன் பூங்காவில் ரூ.5 கோடியே 45 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா.

நகர்ப்புற வீடட்றோருக்கு தேவராஜ் தெருவில் ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரவு நேர காப்பகம் மற்றும் சிவா ராவ் சாலையில் ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம், குட்டி தம்புரான் தெருவில் ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரவுக் காப்பகம், புளியந்தோப்பு நரசிம்ம நகரில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் திறந்து வைத்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் வீனஸ் தியேட்டர் அருகில் மாநகராட்சி சார்பில் ரூ.7 கோடியே 73 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரி, செல்லப்பா தெருவில் ரூ.2 கோடியே 34 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். அதன்படி மாநகராட்சி சார்பில் மொத்தம் ரூ.25 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் செலவிலான கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 33 லட்சத்தில் சென்னையில் கன்னிகாபுரம், வெங்கடேசபுரம், புளியந்தோப்பு, ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 6 மேம்படுத்தப்பட்ட தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பெரம்பூரில் ரூ.8 கோடியே 76 லட்சத்தில் கட்டப்பட்டள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பேப்பர் மில்ஸ் சாலையிலுள்ள எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 4,444 கழக நிர்வாகிகளுக்கு தோல் பை, நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா ஆகியவற்றையும், பெரம்பூர், டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் 8ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவியர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,Chennai Corporation ,Chennai Metropolitan Development Corporation ,Revenue and Disaster Management Department ,Kolathur ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...