- அம்பத்தூர் தென்றல் நகர் 3வது தெரு
- நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்
- சென்னை
- வி.எஸ். சுரேஷ்
- அம்பத்தூர் கள்ளிகுப்பம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- அம்பத்தூர்
- மேற்கு பாலாஜி நகர் விரிவாக்கம்
- தென்ட்ரல் நகர் 3வது தெரு
- புஜால் ஏரி
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்த வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், அம்பத்தூர் மேற்கு பாலாஜி நகர் விரிவாக்கம் தென்றல் நகர் 3வது தெருவில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து புழல் ஏரியில் கலந்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் கழிவுநீரை மழைநீர் வடிகாலில் விடுகிறார்கள். குப்பை கழிவுகளும் வடிகாலை அடைத்துள்ளது. இதனால் எங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசு அதிக அளவில் உற்பத்தியாகிவிட்டது. இது குறித்து மாநகராட்சிக்கு கடந்த மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை. எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த மனு குறித்து பதில் தருமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தென்றல் நகரில் 15 தெருக்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட தெருக்களில் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளால் விரிவான கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த பகுதியில் கடந்த 2015 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படத்தொடங்கியது. பாதாள சாக்கடை திட்டம் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தென்றல் நகர் 3வது தெருவில் ஆய்வு செய்தபோது கழிவுநீர் எதுவும் தேங்கி குடியிருப்பு பகுதிக்கு வரவில்லை என தெரியவந்தது.
கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த மாநகராட்சிதான் நடவடிக்கை எடுக்க முடியும். இது தாழ்வான பகுதி என்பதால் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் தற்காலிகமாக இங்கு தேங்குகிறது. இது மழை நீர்தானே தவிர கழிவுநீர் அல்ல. இந்த பகுதியிலிருந்து கழிவுநீர், மழை நீர் சேகரிக்கப்பட்டு தண்ணீர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை நடத்தியதில் மழைநீரும் கழிவு நீரும் ஒன்றாக கலக்கவில்லை என்று தெரியவந்துள்ளது இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
