×

காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடல் கோயம்பேடு மார்க்கெட்டில் 2000 டன் காய்கறி தேக்கம்: குப்பையில் வீசும் அவலம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. சென்னை மக்களின் காய்கறித் தேவையை ஒவ்வொரு நாளும் பூர்த்தி செய்யும் வகையில் பல டன் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு வருகிறது. குறிப்பாக நேற்று மட்டும் சுமார் 520 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்குக் குவிந்தது.
இந்நிலையில், ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வணிக சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான சிறிய உணவங்கள் முழுவதுமாக மூடப்பட்டுவிட்டது. மேலும், கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் பெருநிறுவனங்களில் செயல்பட்டு வரும் உணவகங்கள் உணவு சமைப்பதை நிறுத்திவிட்டன. அதேபோல், சாலையோர தள்ளு வண்டி உணவுக் கடைகளும் திறக்கவில்லை. அதேநேரம், திறக்கப்பட்டுள்ள குறைந்த அளவிலான உணவகங்களும் உணவு வகைகளைக் குறைத்து டிபன் உள்ளிட்ட சில உணவுகளை மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.

அதன் காரணமாக காய்கறிகளின் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாகக் கடந்த 3 நாட்களாகவே கோயம்பேடு சந்தையில் காய்கறி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்தும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் கேரட், கத்திரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், பாகற்காய், புடலங்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்து உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

அதே போல் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளிலும் காய்கறி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் 30 சதவீதத்திற்கும் மேல் விற்பனை சரிந்துள்ளதாக வியபாரிகள் கூறுகின்றனர். இதனால், நேற்று கோயம்பேடு சந்தையில் 2000 டன் காய்கறிகள் தேக்கமடைந்தது. விற்பனை குறைவு மற்றும் அதிகரிக்கும் வெயில் காரணமாக தேக்கமடையும் காய்கறிகளை மறுநாளே குப்பையில் வீசவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 500 டன் அளவிலான பஜ்ஜி, மிளகாய் விற்பனையாகாததன் விளைவாக குப்பையில் வீசப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல், காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Koyambedu market ,Chennai ,Tamil Nadu ,Andhra Pradesh ,Telangana ,Karnataka ,Maharashtra ,Koyambedu… ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...