×

18 ஆண்டுகால இழுபறிக்கு பின்னர் வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது: புறநகர் பகுதி மக்கள் வரவேற்பு

சென்னை: சென்னையில் 18 ஆண்டு கால இழுபறிக்கு பின், வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் 1985ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சென்னை கடற்கரை முதல், வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ரூ.877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்தன. அப்போது அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ்வாறு பல்வேறு பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 18 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, சிக்னல், ரயில் நிலைய பராமரிப்பு பணிகள், சோதனை ஓட்டம் உள்ளிட்டவை கடந்த மாதம் நடந்தது.

இந்நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் மற்றும் பரங்கிமலை மெட்ரோ வழித்தடத்துடன் இணைக்கும் இந்த புதிய பறக்கும் ரயில் சேவை வரலாற்று சிறப்புமிக்கதாக கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை மூலம், தென் சென்னை புறநகர் பகுதியில் வசிப்பவர்கள் தரமணி மற்றும் பெருங்குடி போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கு நேரடி மற்றும் வசதியான ரயில் இணைப்பை பெறுவார்கள். குறிப்பாக நங்கநல்லூர், மடிப்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் நபர்கள், தரமணி, பெருங்குடி மற்றும் திருவான்மியூர் போன்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி மையங்களை வேகமாகவும், சிரமமின்றியும் சென்றடைய இது பெரிதும் உதவும்.

* கடந்து வந்த பாதை
1995 நவம்பர் 1ம் தேதி சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை இந்த ரயில் சேவை தொடங்கியது. இது இந்தியாவின் முதல் மேம்பாலம் ரயில் சேவை என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றது. 1997 அக்டோபரில் திருமயிலை வரை நீட்டிக்கப்பட்டு முதல்கட்டம் முழுமையடைந்தது. 2004 ஜனவரி 26ல் மயிலாப்பூர் முதல் திருவான்மியூர் வரை சேவை தொடங்கியது. 2007 நவம்பர் 19ல் திருவான்மியூரிலிருந்து வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. வேளச்சேரி சேவை தொடங்கியவுடன் தினசரி வருவாய் ரூ.84,000ல் இருந்து ரூ.2.31 லட்சமாகவும், பயணிகள் எண்ணிக்கை 7,000ல் இருந்து 21,000 ஆகவும் உயர்ந்தது. 2008ல் அன்றைய முதல்வர் கலைஞர் ரூ.495 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி – பரங்கிமலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

* முதல் மற்றும் கடைசி ரயில் நேரம்
திசை ரயில் எண் புறப்பாடு வருகை
கடற்கரை-பரங்கிமலை (முதல்) 41001 காலை 5:00 காலை 6:05
கடற்கரை-பரங்கிமலை (கடைசி) 41085 இரவு 22:20 இரவு 23:25
பரங்கிமலை-கடற்கரை (முதல்) 41002 காலை 5:00 காலை 6:05
பரங்கிமலை-கடற்கரை (கடைசி) 41086 இரவு 22:20 இரவு 23:25

* உறுதி சான்றிதழ்
2024 ஜனவரி 18ம் தேதி ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையே கட்டப்பட்ட கான்கிரீட் கார்டர் சரிந்து விழுந்தது. இதனால் மீண்டும் கட்டுமான பணிகள் தாமதமானது. பின்னர் இந்த கர்டர் சீரமைக்கப்பட்டு, சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி சுமை ஆய்வு சோதனை நடத்தி கட்டமைப்பு உறுதி சான்றிதழ் வழங்கியது. கடந்த 5ம் தேதி ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் புதிய வழித்தடத்தில் விரிவான பாதுகாப்பு ஆய்வு நடத்தினார். சோதனை ஓட்டத்திற்கு பிறகு, தற்போது பரங்கிமலை – வேளச்சேரி ரயில்சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

* தாமதத்திற்கு அதிமுக காரணம் அமைச்சர் குற்றச்சாட்டு
அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று காலை 8 மணிக்கு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து பறக்கும் ரயிலில் வேளச்சேரி வரை பயணிகளுடன் பயணம் செய்தார். பின்னர் மீண்டும் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு திரும்பி வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தாமல், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுவிட்டனர். திமுக ஆட்சிக்கு பிறகு மீண்டும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் தாமதமானதற்கு அதிமுக ஆட்சி தான் காரணம். நிகழ்ச்சிக்கு ரயில்வே தரப்பிலிருந்து எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை,’ என்றார்.

* ஆதம்பாக்கத்தில் நிற்காது
பறக்கும் ரயில் தற்போது ஆதம்பாக்கம் நிலையத்தில் தற்போது ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது. நிறுத்தம் தொடங்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையால் பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி மக்கள் நேரடியாக பரங்கிமலை வந்து புறநகர் ரயில் அல்லது மெட்ரோவில் மாறி ஏறலாம். இது சென்னையின் முதல் முழுமையான மல்டிமாடல் ட்ரான்சிட் ஹப் ஆகும்.

Tags : Velachery ,Parangimalai ,Chennai ,Chennai.… ,
× RELATED திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி...